| ADDED : ஜூன் 20, 2024 04:21 AM
சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி கடைக் கோயில் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.சிவகாசி தேரடி முக்கு பகுதியில் சிவன், கருப்பசாமி, பெருமாள் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள கடைக் கோயில் வீதியில் ரோட்டில் இருபுறமும் பழம், பூ விற்பனை உள்ளிட்ட கடைகள் உள்ளது. இவைகளில் பெரும்பான்மையானவை ரோட்டில் ஆக்கிரமித்து இருந்தது. இதனால் டூவீலர் செல்வதே மிகவும் சிரமமாக இருந்தது. தினமும் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர திட்டமிடுனர் மதியழகன், நகரமைப்பு ஆய்வாளர் சுந்தரவள்ளி, சுகாதார அலுவலர்கள் திருப்பதி, பகவதி, சுரேஷ், பிரபு, சித்திக், நகர அமைப்பு மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் எளிதில் சென்று வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.