உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பசுமை குடை போல் வளர்ந்து நிற்கும் புளியமரங்கள்; காரியாபட்டி தோணுகாலில் ரம்மியம்

பசுமை குடை போல் வளர்ந்து நிற்கும் புளியமரங்கள்; காரியாபட்டி தோணுகாலில் ரம்மியம்

நூறு ஆண்டுகளைக் கடந்தும் சூரிய கதிர்கள் நுழைய முடியாத அளவிற்கு அடர்ந்து வளர்ந்து நிற்கும் புளிய மரங்களின் நிழல் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இதமான சூழ்நிலையும், பார்க்க ரம்மியமாகவும், முன்னோர் விட்டுச் சென்ற அருட்கொடையாக இருந்து வருகிறது.குளிர்சாதன வசதிகள் இல்லை என்றால் இருக்க முடியாது என்கிற அளவிற்கு கால சூழ்நிலை மாறி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பர். இப்போது தகிக்கும் வெப்ப அலையால் அனைவருக்கும் தெரிந்து விட்டது. மர வளர்ப்பின் அவசியமும் பலருக்கு புரிந்துள்ளது.வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என அரசு கூறியதே தவிர, எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இன்றைய நற்செயல், நாளைய நற்பலன் என்பதை யாரும் உணரவில்லை. ஆனால் நமது முன்னோர் அப்போதே யோசித்து, பின்வரும் சந்ததியினருக்கு நல்ல விஷயங்களை உருவாக்கிவிட்டு சென்றுள்ளனர்.அந்த அடிப்படையில் காரியாபட்டி தோணுகால் கிராமத்தில் நுாறு ஆண்டுகளுக்கு முன் மக்கள் இளைப்பாற, வெயிலு கந்தம்மன் கோயிலுக்கு வருபவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள, 10 ஏக்கரில் நுாற்றுக்கும் மேற்பட்ட புளிய மரக்கன்றுகளை நட்டனர். நாளடைவில் அடர்த்தியாக வளர்ந்து புளியந்தோப்பாக உள்ளன.குறிப்பாக சூரிய கதிர்கள் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு பசுமை குடை போல் இதமான சூழலை தருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் அந்த இடத்திற்கு செல்பவர்கள் இயற்கையான குளிர்ந்த காற்றுடன் சுகமான சூழ்நிலையை அனுபவிக்கலாம். இதன் பலன் 4 தலைமுறைகளை கடந்து நமக்கு கிடைக்கிறது என்றால் முன்னோர் நமக்காக விட்டுச் சென்ற அருட்கொடை தான்.தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த இடம் இருக்கிறது. கூடுதலாக புங்கை, வேம்பு, உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர். சந்தை நடக்கும் பகுதிகளை மட்டுமே துாய்மைப்படுத்துகின்றனர். தோப்பு முழுவதும் துாய்மைப்படுத்தி ஆங்காங்கே கல் இருக்கை அமைத்து பூங்கா போல் மாற்ற வேண்டும். இது போன்ற இதமான சூழ்நிலை இனி ஒரு காலத்தில் உருவாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. இருப்பதை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குருசாமி, விவசாயி, தோணுகால்.தோணுகால் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. இங்குள்ள புளிய மர தோப்புகளுக்குள் தான் ஆட்டுச் சந்தை, காய்கறிச் சந்தை நடக்கிறது. எவ்வளவு கடுமையான வெயில் அடித்தாலும் இந்த இடம் மட்டும் எப்போதும் நிழலாக இருக்கும். பார்க்க அழகாக, ரம்மியமாக நுாறு ஆண்டுகளைக் கடந்தும் குளுகுளுவென அருமையான சீதோஷ்ண நிலையை தரக்கூடிய இடமாக இருக்கிறது. எங்களைப் போன்றவர்களுக்கு இந்த இடம் தான் ஊட்டி, கொடைக்கானல்.- ஆறுமுகம், விவசாயி, தோணுகால்.

குளுகுளு சூழல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி