விருதுநகர் : விருதுநகரில் ஜவுளி பூங்காவின் சிப்காட் திட்ட அலுவலக கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. .2023ல் இந்தியா முழுவதும் தமிழகம், தெலுங்கானா, ம.பி., உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்., மித்ரா ஜவுளி பூங்கா இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் நிலத்தில் அமைக்க தேர்வு செய்யப்பட்டது. இதற்காக 2023 மார்ச் 22ல் முதல்வர் ஸ்டாலின், மத்திய வர்த்தகம், ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையழுத்திட்டு காணொலிகாட்சி மூலம் பூஜையும் போடப்பட்டது. 1052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ரூ.2 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்துகிறது. இதில் 51 சதவீதம் மத்திய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இ.குமாரலிங்கபுரத்தை மையமாக கொண்டு அருகில் உள்ள அச்சம்பட்டி, கோவில்புலிக்குத்தி கிராமங்கள் வரை இந்த ஜவுளி பூங்கா பெரிய அளவில் அமைகிறது என தெரிவிக்கப்பட்டது.இதன் மூலம் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதன் திட்ட அலுவலகம் கட்டும் பணி தேர்தல் அறிவிக்கப்படும் முன் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. தற்போது அப்பணிகள் வேகமெடுத்துள்ளன.ஜவுளி பூங்காவால் மணிப்பாரைப்பட்டி, துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர், கன்னிச்சேி, தம்மநாயக்கன்பட்டி, ஆவுடையாபுரம், கோட்டூர், சின்னையாபுரம், முதலிபட்டி, தியாகராஜபுரம், சங்கரலிங்கபுரம், எட்டூர்வட்டம் உள்ளிட்ட 30 கிராமங்கள் பயன்பெறுகின்றன.