உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமான ரோடு, தாழ்வாக செல்லும் மின்வயர்கள் தவிப்பில் விருதுநகர் மன்னார்க்கோட்டை ஊராட்சி மக்கள்

சேதமான ரோடு, தாழ்வாக செல்லும் மின்வயர்கள் தவிப்பில் விருதுநகர் மன்னார்க்கோட்டை ஊராட்சி மக்கள்

விருதுநகர்: செயல்படாத சுகாதார வளாகங்களால் திறந்தவெளி அதிகரிப்பு, சேதமடைந்த ரோடு, தாழ்வாக செல்லும் மின்வயர்கள், கரையில் கருவேல மரங்கள்வளர்ந்த கண்மாய் என பல தீராத பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகின்றனர் விருதுநகர் அருகே மன்னார்க்கோட்டை ஊராட்சி மக்கள்.விருதுநகர் ஒன்றியம் மன்னார்க்கோட்டை ஊராட்சியில் மேலக்கோட்டையூர், சின்னையாபுரம், மன்னார்க்கோட்டை, குமராபுரம், முத்துசிவலிங்காபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. மன்னார்க்கோட்டையில் பல பகுதிகளில் வாறுகால் வசதி இல்லை. தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. ஊராட்சியில் மக்கள் பாதையை விட்டு தராததால் ரோடு போடுவதும்,மக்கள் அவ்வழியை பயன்படுத்துவதும் கடும் சிரமமாக உள்ளது. கண்மாயின் கரை முழுவதும் கருவேல முட்கள் வளர்ந்துள்ளது. தற்போது கோடை முடிந்துள்ளதால் நீர் வற்றியுள்ளது. கண்மாய் கரை, ஊரின் கருவேலம் அடர்ந்த பகுதிகள் ஆகியவை திறந்த வெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தப்படுகின்றன.மன்னார்க்கோட்டை, சின்னையாபுரத்தில் உள்ள சுகாதார வளாகங்கள் செயல்படாமல் புதர்மண்டி கிடக்கின்றன. இரவு நேரங்களில் விஷப்பூச்சிகளுக்கு மத்தியில் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டிய அவலமான சூழல் உள்ளது. பெண்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.இங்குள்ள பள்ளியில் இருந்து முத்துசிவலிங்காபுரம் செல்லும் ரோடு மண்ணும், ஜல்லியுமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். மின் வயர்கள் பல இடங்களில் தாழ்வாக செல்கின்றன. குறிப்பாக மன்னார்கோட்டையில் இருந்து வலையபட்டி செல்லும் ரோட்டில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மின்வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊருணிக்கரையில் மதுபாட்டில்கள் உள்ளிட்ட குப்பை குவிந்து கிடக்கின்றன. மேலக்கோட்டையூரில் தன்னார்வ அமைப்பு சார்பில் கழிப்பறை கட்டப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.மன்னார்க்கோட்டையில் பழமையான சிவன் கோயில் உள்ளது. போதிய பராமரிப்பு இல்லை. இவ்வூர் மக்கள் வழிபடும் நிலையில், இந்த சிவன் கோயிலை ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் பராமரிக்க வேண்டும் என எதிர் பார்க்கின்றனர்.எனவே ஊராட்சி நிர் வாகம் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மன்னார்க்கோட்டை ஊராட்சி மக்களுக்கு செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பராமரிப்பு தேவை

காசி கனி, மேலக்கோட்டையூர்: மாரியம்மன் கோயிலுக்கு ஊராட்சியில் இருந்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தந்தால் பயனுள்ளதாக இருக்கும். கண்மாய் கரையில் வளர்ந்துள்ள கருவேல முள் மரங்களை அகற்ற வேண்டும். எங்கள் மயானத்திற்கு பாதை பராமரிப்பு இன்றி உள்ளதால் மக்கள் நடந்து செல்லும் போது சிரமத்தை சந்திக்கின்றனர்.

மின் பிரச்னையால் அல்லல்

கே.சாமியப்பன், தலைவர்,சிறகுகள் அமைப்பு: மேலக்கோட்டையூருக்கு தெற்கு தெருவில் மயானத்திற்கு பாதை, தண்ணீர் வசதி இல்லை. தன்னார்வ அமைப்பு சார்பில் சுகாதார வளாகம் கட்டியும் மின், குடிநீர் வசதி இல்லை. எங்கள் ஊரில் மின் பிரச்னை உள்ளது. அடிக்கடி இரண்டு லைனில் ஒரு லைன் போய்விடும். லேசான மழை பெய்தாலே மின்தடை ஏற்பட்டு விடும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

கூழ்வளந்தான், ஊராட்சி தலைவர், விருதுநகர்: முத்துசிவலிங்காபுரத்தில் 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டி, வாறுகால், சின்னையாபுரத்தில் சுகாதார வளாகம், 3 தெருக்களில் பேவர் பிளாக் ரோடு, அடிகுழாய், மன்னார்க்கோட்டையில் ரோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சியில் உள்ள ஐந்து கிராமங்களிலும் தேவைக்கேற்ப ரோடு, வாறுகால் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தேவைப்படும் இடங்களில் நிர்வாக அனுமதி கோரி ஒப்புதலுக்கு திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளன. சுகாதார வளாகங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை