| ADDED : ஜூன் 30, 2024 06:03 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நகர், ஊரகப்பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் மக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசு அலுவலர்கள் திண்டாடுகின்றனர்.மாவட்டத்தில் நகர், ஊரகப்பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவை அரசு அலுவலக வளாகங்கள், மருத்துவமனைகள், தெரு, ரோடுகளில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சமீபகாலமாக தெருநாய்கள் ரோட்டில் விளையாடும் குழந்தைகள், நடந்து செல்பவர்களை கடித்து குதறும் சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் இரவு பணி முடிந்து வருபவர்கள், சைக்கிள், டூவீலரில் செல்பவர்களை துாரத்துவதால் வாகன விபத்துக்களில் சிக்கி காயமடையும் நிகழ்வுகள் நடக்கிறது.இது குறித்து அந்தந்த பகுதியில் வசிப்பவர்கள் நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் தெருநாய்களை கட்டுப்படுத்துவதில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் தான் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்க முடியாமல் திண்டாடுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அதிகாரி ஒருவர் கூறியதாவது: தெருநாய்களை கொல்ல கூடாது. அவற்றை பிடித்து கருத்தடை செய்த பின் அவை இருந்த இடத்தில் விட்டு விட வேண்டும் என அரசின் விதி உள்ளது. ஆனால் சமீபகாலமாக எந்த பகுதியிலும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இதற்கு காரணம் நாய்களை பிடிக்க போதிய ஆட்கள் நகர், ஊரக அமைப்புகளிடம் இல்லை. மேலும் கருத்தடை செய்ய அரசு கால்நடை மருத்துவர்களை அழைக்கின்றனர். அவர்கள் கால்நடை முகாம், மருத்துவமனை பணிகளை மேற்கொள்கின்றனர். அதனால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் உள்ள கால்நடை மருத்துவர்களை அழைக்க வேண்டியுள்ளது.இந்த பணிகளை உரிய முறையில் செய்ய அரசாங்கம் முன்வரவில்லை. இதனால் மக்களிடம் இருந்து புகார் எழுந்தும் நடவடிக்கை எடுக்காமல், நாய்களை பிடித்து தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகின்றது, என்றார்.