| ADDED : மார் 31, 2024 05:31 AM
விருதுநகர், : விருதுநகர் மாவட்ட விவசாயிகள் திடக்கழிவு மேலாண்மையில் மண்புழு உரம் தயாரித்து இயற்கை முறையில் உர மேலாண்மை செய்து பயன்பெறலாம் என விதை சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: திடக்கழிவுகளை மக்க செய்து மண்புழுவிற்கு உணவாக்கி அதனின் எச்சமாக வெளிவருவதே மண்புழு உரம். இதில் அதிக சத்துக்கள், வளர்ச்சி ஊக்கிகள் உள்ளன. நன்மை தரும் நுண்ணுயிரிகளும் அதிகம் உள்ளன. திடக்கழிவுகளை மண்புழு உணவாக ஏற்று கொள்ளும் பக்குவத்திற்கு மாற்றவேண்டும். ஆப்ரிக்கன் மண்புழு, சிவப்பு மண்புழு, மக்கும் மண்புழு போன்றவை மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண் புழுக்கள்.மண்புழு உரம் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்ய முடியும். நிழலுடன் அதிகளவு ஈரப்பதம், குளிர்ச்சியான பகுதியாக இருத்தல் அவசியம். பயன்படாத மாட்டு தொழுவம், கோழி பண்ணை, புறக்கட்டடங்களை பயன்படுத்தலாம். திறந்தவெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால் நிழலான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நெல் உமி அல்லது தென்னை நார் கழிவு அல்லது கரும்பு சக்கைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் ரூ.3 செ.மீ., உயரத்திற்கு பரப்ப வேண்டும். ஆற்று மணலை இந்த படுகையின் மேல் 3 செ.மீ., .உயரத்திற்கு துாவவேண்டும். அடுத்த 3 செ.மீ., உயரத்திற்கு தோட்டக்கால் பண்ணை பரப்ப வேண்டும். அதற்கு மேல் தண்ணீரை தெளிக்க வேண்டும். கால்நடை கழிவுகள், பண்ணை கழிவுகள், பயிர், காய்கறி கழிவுகள் ஆகிய அனைத்தும் மண்புழு உரம் தயாரிக்க மிக சிறந்தது. கால்நடை கழிவுகளை தவிர மற்ற கழிவுகளை சாணத்துடன் கலந்து 20 நாட்களுக்கு மக்க வைத்து பின் மண்புழு படுக்கையில் இட வேண்டும். மண்புழு படுக்கையில் ஈரப்பதம் 70 சதவீதம் அமையுமாறு கண்காணிக்க வேண்டும். ஒரு சதுரமீட்டர் பரப்பிற்கு 2 கிலோ மண்புழு தேவைப்படும். உற்பத்தியானமண்புழு உரத்தை 40 சதவீதம் ஈரப்பதத்தில் சூரிய ஒளி படாதவாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும். இவ்வாறு மண்புழு உரம் தயாரித்து இயற்கை முறையில் உர மேலாண்மை செய்து பயன்பெறலாம், என்றார்.