| ADDED : ஆக 09, 2024 12:11 AM
விருதுநகர்: மாவட்ட நகராட்சிகளில் ரோடு, கழிவுநீர் தேக்கம், தெருவிளக்கு எரியாதது குறித்து புகார் தெரிவிக்க எந்த வசதியும் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். அலுவலகங்களில் சென்று நோட்டில் எழுதி வைத்தாலும் எந்த தீர்வும் கிடைப்பதில்லை என மக்கள் புலம்புகின்றனர்.மாவட்டத்தில் விருதுநகர், சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் என 5 நகராட்சிகள் உள்ளன. முன்பு நகராட்சிகளில் புகார்கள் எழுதி வைக்கும் நோட்டுகள் பராமரிக்கப்படும். அதில் புகார்களை எழுதி வைத்தால் அது சம்மந்தப்பட்ட வார்டில் பணி செய்யும் சுகாதார, பொறியியல் பிரிவு அலுவலர்களை சென்றடையும். உடனடியாக சரி செய்வர்.நாளடைவில் இந்த நோட்டு போட்டு பராமரிக்கும் பணி முற்றிலும் கைவிடப்பட்டு விட்டது. அதே போல் விருதுநகரில் ஆங்காங்கே தெரு விளக்கு எரியாத பிரச்னை அதிகம் உள்ளது. மாலை நேரங்களில் மழை பெய்யும் போது பழுதாகி எரிவதில்லை. இது தொடர்பாக குடியிருப்போர் அலுவலக நோட்டில் எழுதி வைத்தாலும் வந்து பார்க்க யாருமில்லை. நடமாடவே அச்சம் இருப்பதாக மக்கள் தவிக்கின்றனர். இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இது குறித்து புகார் அளிக்க கவுன்சிலர்கள் மட்டுமே ஒரே வழி. தனியாக அலைபேசி எண் எதுவும் இல்லை. இதேபோல் பிற நகராட்சிகளிலும் வாறுகால் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு, குடியிருப்பை மாதக்கணக்கில் சூழ்ந்து நிற்கும் மழைநீர் என கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.தொடர் மழையால் சில பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல் போகவும் செய்கின்றன. எந்த புகாருக்கும் நகராட்சியை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் நகராட்சிகளுக்கு புகார் அளிக்க தனித்தனியே அலைபேசி எண்களை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.