| ADDED : பிப் 20, 2024 12:26 AM
சிவகாசி, - 'சட்டத்தை கேடயமாக பயன்படுத்தப்படாமல் ஆயுதமாக பயன்படுத்தும் சமூக சூழல் முற்றிலும் தவறானது.'' என சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் நடந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் , சார்பு நீதிபதி இருதய ராணி தெரிவித்தார்.சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் மகளிர் துன்புறுத்தல் எதிர்ப்பு, பாதுகாப்பு அமைப்பு சார்பில் கல்லுாரி ஊழியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் விஜயபாஸ்கர் நாயுடு வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார்.மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் , சார்பு நீதிபதி இருதய ராணி பேசியதாவது, அனைவரும் அடிப்படைச் சட்டங்களை அறிந்திருக்க வேண்டும். குழந்தை திருமணம் போன்ற சமூக அவலங்கள் சற்று குறைந்திருப்பதைப் போல குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழங்கப்படும் சட்டங்களை அறிந்து களைய முற்பட வேண்டும். சட்டங்களை அனைவரும் அறிந்திருப்பது குற்றங்களை தடுப்பதற்காக. ஆனால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தெரிந்து கொண்டு குற்றங்கள் பெருகி வரும் சூழலே நிலவி வருகிறது.இந்நிலை மாற வேண்டும். சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் என்பதனை அனைவரும் கைக்கொள்ள வேண்டும். சட்டத்தை கேடயமாக பயன்படுத்தப்படாமல் ஆயுதமாக பயன்படுத்தும் சமூக சூழல் முற்றிலும் தவறானது. இவ்வாறு அவர் பேசினார். உதவி பேராசிரியர் ஆனந்தவள்ளி நன்றி கூறினார் கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அமைப்பின் செயலர்கள், உறுப்பினர்கள் செய்தனர்.