| ADDED : மார் 18, 2024 12:00 AM
நான்கு வழி சாலை முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 1998ல், துவங்கப்பட்டது. படிப்படியாக அனைத்து ஊர்களுக்கு செல்லும் வகையில் நான்குவழி சாலை அமைக்கப்பட்டது. பாதுகாப்பாகவும், விபத்தின்றியும், விரைவாக செல்லவும், போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் செல்லும் வகையில் இந்த ரோடுகள் உள்ளது.ரோடுகள் இரண்டாக பிரிக்கப்பட்டு, டிவைடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வழிப்பாதையில் செல்லும் வகையில் உள்ளன. ஆனால் பல ஊர்களில் நான்கு வழி சாலையில் உள்ள டிவைடரை பெயர்த்து குறுக்கு வழியில் டூவீலர்கள், ஆட்டோ, சிறிய வாகனங்கள் விதிகளை மீறி செல்கின்றன. ரோட்டை கடக்கும் போது, அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. இது போன்ற விபத்துக்கள் பல பகுதிகளில் அடிக்கடி நடக்கிறது.அருப்புக்கோட்டை காந்தி நகர் ரயில்வே மேம்பாலம் அருகில் டிவைடரை பெயர்த்து அடுத்த ரோட்டிற்கு இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் போது அந்த வழியாக வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. இதே போன்று மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை அருப்புக்கோட்டை வழியாக செல்லும் மதுரை - துாத்துக்குடி நான்கு வழி சாலையில் பல பகுதிகளில் டிவைடர் பெயர்க்கப்பட்டுள்ளது.போக்குவரத்து போலீஸ், நெடுஞ்சாலை துறை நிர்வாகம் இந்த பகுதிகளில் சேதத்தை சீரமைக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் அருகில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். இது போன்று விதி மீறி டூவீலர்களில் செல்பவர்கள் மீது நடவடிக்கை, அபராதம் விதிக்க வேண்டும்.மேலும் நான்கு வழி சாலையில் டூவீலர்கள் செல்வதற்கு என்று ரோட்டின் ஓரத்தில் இடமுள்ளது. இதில் செல்லாமல் ரோட்டின் நடுவில் சென்று, வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறி செல்பவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.