| ADDED : ஜூலை 13, 2024 07:12 AM
ராஜபாளையம் : மாவட்டத்தில் விதியை மீறி ரோட்டில் காய வைக்கப்படும் தானியங்கள் பிரித்தெடுத்த பின் விடப்படும் கழிவுகளால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காண வேண்டும். மாவட்டத்தில் எள், உளுந்து, கம்பு, கேழ்வரகுஉள்ளிட்ட எண்ணெய் வித்து, பயறு வகைகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி நடந்து வருகிறது. விவசாய பயிர்களில் இருந்து விளைந்த தானியங்களை பிரித்தெடுக்க போதிய இட வசதியோ, காய வைக்க களமோ இல்லாததால் விளை நிலங்களை ஒட்டியுள்ள மெயின் ரோடுகளை விவசாயிகள்பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துஉள்ளனர்.விதிகளை மீறி செய்யப்படும் இப்பணிகள் முடிந்த பின் பிரித்தெடுத்த எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகளுக்கு பின் அதன் தோகை, செடிகளை விவசாய கழிவுகளாக அதன் அருகிலேயே விட்டுச் செல்கின்றனர். ராஜபாளையம் தாலுகா அலுவலகம் முதல் மலையடி வார அய்யனார் கோயில் வரை சீசன்களில் இவற்றை காண முடிகிறது. இவை காய்ந்து ரோட்டோரம் கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்படுவதுடன் விபரீதம் தெரியாமல் சிலர் பற்ற வைத்து செல்வதால் எளிதில் தீப்பிடித்து இதை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு பரவுகிறது. அத்துடன் பாதுகாக்கப்பட்டு வளர்த்து வரும் ரோட்டோர மரங்கள் தீயினால் கருகி விடுகின்றன. இதனால் மரக்கன்று வளர்த்து வரும் சமூக ஆர்வலர்களின் நோக்கம் வீணாகிறது. அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் விவசாய கழிவுகள் விட்டு செல்வதற்கு மாற்று தீர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு வழங்குவதுடன் தானியங்கள், பயறு வகைகளை உலர்த்துவதற்கான களங்களை விவசாயத் துறையுடன் இணைந்து மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். இதற்கும் வழியில்லை எனில் விவசாய கழிவுகளை நவீன இயந்திரம் மூலம் துண்டுகளாக்கி இயற்கை உரம் போன்ற மாற்று பயன்பாட்டிற்கு வழி காண வேண்டும்.