அச்சங்குளத்தில் குளியல் தொட்டி மின் மோட்டார் பழுது: மக்கள் சிரமம்
காரியாபட்டி: காரியாபட்டி அச்சங்குளத்தில் குளியல் தொட்டி மின் மோட்டார் பழுதாகி இரண்டு மாதமாக கிடப்பில் போட்டதால் குளிக்க திண்டாடி வருகின்றனர். காரியாபட்டி அச்சங்குளத்தில் ரூ. பல லட்சம் செலவில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. அக்கிராமத்தினருக்கு குளிக்க, துணிகள் துவைக்க மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அத்துடன் அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கழிவு நீராக வெளியேறும் தண்ணீர் பாய்ந்து நன்கு வளர்ந்து வந்தது. இந்நிலையில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டது. இதனால் குளிக்க வசதி இன்றி மக்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. 2 மாதங்களாகியும் மின் மோட்டாரை சரி செய்யாமல் கிடப்பில் போட்டனர். அதிகாரிகளிடத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட மின் மோட்டாரை பழுது நீக்கி, இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.