| ADDED : ஜன 03, 2024 05:44 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு இழப்பீடை விரைவில் வழங்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில் டிச. 18ல் பெய்த கனமழையால் திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்துார் ஆகிய பகுதிகளில் நெல், சோளம், தட்டாம்பயறு, துவரை, வெங்காயம், வாழை போன்ற பயிர்கள் பாதிப்பை சந்தித்தன. நெல்லை, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரூ.250 கோடி விவசாய பாதிப்புக்கான நிவாரணத்திற்கு ஒதுக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது வரை மாவட்டத்தில் பாதிப்பிற்கான இழப்பீடு குறித்த முழுவிவரம் விவசாயிகளுக்கு சென்றடையாமல் உள்ளன.20 ஆயிரம் எக்டேருக்கு மேல் பாதிப்பு இருக்கும் என வேளாண்துறை கூறி வருகிறது. இந்நிலையில் முதல்வர் இழப்பீடு அறிவித்த 8 மாவட்டங்களுக்குள் விருதுநகர் மாவட்டமும் வருகிறதா என மாவட்ட நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும்.இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன் கூறியதாவது: மக்காசோளம், வெங்காயம், பயறு வகைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கலெக்டர் ஜெயசீலன் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் பார்வையிட்டுள்ளார். மக்காசோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை கொடுக்க வேண்டும். பயிர் வகைகள் வாரியாக நிவாரணம் எவ்வளவு என விரைவில் அறிவிக்க வேண்டும், என்றார்.