காட்டுப்பன்றிகளால் பாழாகும் பயிர்கள்
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்று கிராமங்களில் விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் பாழாக்குவதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.அருப்புக்கோட்டை அருகே சவ்வாஸ்புரம், பொம்மகோட்டை, கல்லூரணி உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, காய்கறிகள் உட்பட பயிர் செய்துள்ளனர். தற்போது மக்காச்சோளம், பருத்தி நன்கு விளைந்த நிலையில், இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து விளைந்த மக்காச்சோள கதிர்களை கடித்து குதறியும் செடிகளை சாய்த்தும், பருத்தி செடியில் உள்ள காய்களை தின்றும் பாழாக்கி விடுகின்றன. விவசாயிகள் இரவு நேர காவல், பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்தாலும் பன்றிகள் வந்து பயிர்களை பாழாக்கி விடுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.இதுகுறித்து இந்த பகுதி விவசாயிகள்: கடன் வாங்கி அதிக செலவு செய்து விவசாயம் செய்து வருகிறோம். பயிர்கள் விளைந்து அறுவடை நேரத்தில் பன்றிகள் பயிர்களை கடித்து குதறி விடுகின்றன. விவசாய நிலம் முழுவதும் வேலி, வலைகள், சேலைகளை கட்டி பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்தாலும் அதையும் மீறி நிலத்திற்குள் புகுந்து பயிர்களை தின்று விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே தொல்லையாக இருக்கிறது. பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை தொடர்ந்து நாங்கள் விவசாயத்தில் நஷ்டப்பட்டு தான் வருகிறோம்., என்றனர்.