உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிராமங்களில் சேதமான கதிரடிக்கும் களங்கள்...பராமரிப்பில்லை: செப்பனிடவும் புதிதாக அமைக்கவும் கோரிக்கை

கிராமங்களில் சேதமான கதிரடிக்கும் களங்கள்...பராமரிப்பில்லை: செப்பனிடவும் புதிதாக அமைக்கவும் கோரிக்கை

அருப்புக்கோட்டை: ஊராட்சிகளில் விவசாய தேவைக்காக விவசாயி்களுக்கு அறுவடைகளுக்கு பின் கதிரடிப்பதற்கு அரசு மூலம் கட்டப்பட்டுள்ள களங்கள் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளது. இவற்றை செப்பனிடவும் களங்கள் இல்லாத கிராமங்களுக்கு புதிதாக அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளடக்கி உள்ளன. மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகளுக்கு அரசு மூலம் பல்வேறு நலத் திட்டங்கள், உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் அறு வடைக்கு பின் பயிர்களை கதிரடிப்பதற்கு தங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் ரோட்டை பயன் படுத்தி வந்தனர். இதில் பயிர்களை பரப்பி ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அதை மிதித்து செல்லும் போது கழிவுகளும் பயிர்களும் தனித்தனியாக வந்துவிடும். இதனால் கிராமப் புறங்களில் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரோட்டில் கொட்டியுள்ள பயிர் குவியலால் விபத்து ஏற்படுவதுடன் விவசாயி களுக்கும் விபத்து ஏற்படு கிறது. இதை தவிர்ப்பதற்காக அரசு நிதி ஒதுக்கி ஒவ்வொரு ஊராட்சிக்கும் தேவையான பயிர் களம் அமைத்து தந்தது. அதிக விவசாயம் நடக்கும் கிராமங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட களங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை தரமற்று போனதால், நாளடைவில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் களங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கடமைக்கு கிராமங்களில் ஏதாவது ஒரு இடத்தில் தரமற்ற கட்டுமான பணியில் கட்டி விவசாயிகளுக்கு பயன்படாத வகையில் செய்து விட்டனர். இதனால் விவசாயிகள் பழையபடி ரோட்டில் தங்கள் பயிர்களை கதிரடிக்கின்றனர். அருப்புக்கோட்டை அருகே சவ்வாஸ் புரம், ஆ.கல்லுபட்டி, திருவிருந்தாள்புரம், கல்லூரணி, ஆலடிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் களங்கள் சேதமடைந்துள்ளன. இன்னும் மூன்று மாதங்களில் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விவசாயிகள் கதிரடிப்பதற்கு களம் இல்லாமல் அவதிப்படுவர். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த களங்களை பராமரிக்கவும், களம் இல்லாத கிராமங்களுக்கு புதியதாக தரமான களங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ