| ADDED : ஜன 04, 2024 01:36 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் மானாவாரி பயிரான சிவப்பு சோளம் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அறுவடையில் விளைச்சலும், விலையும் குறைவாக கிடைப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் பரவலாக மானாவாரி பயிர்களான பருத்தி, கம்பு, பாசிப்பயறு, சிவப்பு சோளம் பயிரிடப்படுகிறது. ஆமத்துார், குந்தலப்பட்டி, செங்குன்றாபுரம், எரிச்சநத்தம், வடமலைக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் சிவப்பு சோளம் அறுவடை நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை குறிப்பிட்ட நாளில் துவங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டிச. 17,18 நாட்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சிவப்பு சோளங்கள் பாதிக்கப்பட்டு அழுகும் நிலை ஏற்பட்டது. ஒரு ஏக்கருக்கு விதைப்பு, நிலத்தை திருத்துதல், ஆள் கூலி, மருந்து என மொத்தம் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை செலவாகிறது. இதில் கதிர் அடிக்க மிஷின் கூலியாக ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1300 என தனி செலவும் ஆகிறது. ஆனால் அறுவடை என வரும் போது ஒரு குவிண்டால் ரூ. 3400 மட்டும் போகிறது. 1 ஏக்கருக்கு 4 முதல் 5 மூடைகள் கிடைப்பதால் செலவழித்த தொகையில் பாதி அளவு மட்டும் கிடைக்கிறது. எனவே கனமழையால் சிவப்பு சோளம் பயிரிட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.விவசாயி ராஜ் கூறியதாவது: சிவப்பு சோளம் அறுவடை க்கு தயாராகும் போது கனமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தாண்டு அதிக விளைச்சல் கிடைக்கும் என நடவு செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.