தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் மருத்துவ விடுப்பு வழங்கப்படுமா ஊழியர்கள் எதிர்பார்ப்பு
விருதுநகர்:தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவப் பணிகள் கழகத்தின் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டுமென ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் பலர் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு, மாதத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, மகப்பேறு விடுப்பு, அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்கப்படுகிறது.ஆனால் மருத்துவ விடுப்பு வழங்கப்படுவதில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிறது. தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்கனவே குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலும் மருத்துவ விடுப்புக்கு ஊதியத்தை பிடிப்பது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மருத்துவப் பணிகள் கழகத்தின் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்குவதை போல தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் மருத்துவ விடுப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.