உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடியிருப்பை குளுமையாக்கும் மரங்கள் ஆர்வத்தால் பசுமையும் அதிகரிக்குது

குடியிருப்பை குளுமையாக்கும் மரங்கள் ஆர்வத்தால் பசுமையும் அதிகரிக்குது

பசுமை தான் மனிதனின் உயிராற்றலை மேம்படுத்துகிறது. எத்தகைய இறுக்கமான சூழலில் வாழ்ந்த மனிதனும் பசுமை போர்த்திய மரங்களுக்கு நடுவில் வந்து விட்டால், அதன் அரவணைப்பில் சிறிது நேரம் இருந்து விட்டால் இதயம் தளர்ந்து லேசாகி பிரச்னைகள், இறுக்கங்கள் மாயமாகி விடுகின்றன. அந்த அளவுக்கு மரங்கள் என்பவை மனிதனுக்கு கிடைத்த மாபெரும் வரம். வளர்தலும், வெட்டுப்பட்டால் துளிர்விடுவதும், இயல்பிலே நிழல், கனி தருவதையும் தன்னிச்சையாக செய்வதால் பூமி பரப்பில் இன்றியமையாத ஒரு உயிராக மரங்கள்உள்ளன.இயல்பாகவே மனிதனுக்கு மரங்களோடு இருக்க தான் ஆசை. ஆனால் கால சூழலியலும், பண தேவைகளும் அவனை மரத்திடம் இருந்து துாரம் வைத்துள்ளது. இதனால் புவி வெப்பமயமாதல், நீர், நில மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படும் சூழல் உள்ளது. பசுமை பரப்பு குறைந்து வருவதை அறிந்த மனிதன் அதை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வை செய்து வருகிறான்.மரங்கள் சூழலை பசுமையாக வைத்திருப்பதுடன் பல்வேறு வகைகளில் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆணிவேராக இருக்கிறது. மரம் வளர்ப்பை அமைப்பாகவும், மக்களின் கூட்டு இயக்கமாகவும் செய்து வருகின்றனர் பலர். சில குடியிருப்போரும் தங்கள் வீட்டின் முன் பகுதியில் மரங்கள் நட்டு தற்போது அவை தரும் பலனை அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் லெட்சுமி நகர், பாண்டியன் தெரு, அப்பர் தெரு பகுதிகளில் அதிகளவில் அங்கு குடியிருப்போர் மரங்கள் வளர்த்து வருகின்றனர். இதனால் இரு தெருக்களும் பசுமை போர்வை போர்த்தியது போல் குளுமையாக காணப்படுகிறது. விருதுநகரில் பல தெருக்களில் குடியிருப்போரே தாங்களாக முன் வந்து வீடுகளுக்கு முன் நட்ட மரங்கள் பசுமையை ஏற்படுத்தி வருகிறது. இதை அதிகரிக்க இதே போல் நகரின் மரங்கள் இல்லாமல் விடுபட்ட பகுதிகளில் குடியிருப்போரே மரங்களை நட்டு வளர்த்தால் விருதுநகர் மாசில்லாத நகரமாக மாறும்.

இளைப்பாறுதல் தருகிறது

முனியாண்டி, குடியிருப்போர் சங்க நிர்வாகி: எங்கள் பகுதி பாண்டியன் தெரு, அப்பர் தெருவில் முன்பு நட்டு வைத்த மரங்கள் தற்போது நிழல் தந்து உதவுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் இளைப்பாறுகின்றனர். இன்னும் வருங்காலத்தில் எங்கள் குடியிருப்பு பகுதிகளில் 500 முதல் ஆயிரம் மரக்கன்றுகள் வரை நட்டு பசுமையை அதிகரிப்போம்.

ஆர்வம் அதிகரிக்கிறது

பொனுச்சாமி,குடியிருப்போர் சங்க நிர்வாகி: மக்கள் மத்தியில் இயற்கை, மரங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. பருவநிலை மாற்றத்தால் பாதிப்புகள் இருந்தாலும் அதை தடுக்க உதவுவது மரங்கள் தான். எங்கள் குடியிருப்பு பகுதியில் மக்களே தானாக மரங்கள் நடுகின்றனர். விருதை விழுதுகள் போன்ற அமைப்புகளும் நட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை