உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கனமழையால் நீர்நிலைகளில் வரத்து ...அதிகரிப்பு:நிரம்பியது 50 நீர்வளத்துறை கண்மாய்கள்

கனமழையால் நீர்நிலைகளில் வரத்து ...அதிகரிப்பு:நிரம்பியது 50 நீர்வளத்துறை கண்மாய்கள்

விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி ஒன்றரை மாதம் ஆகி விட்ட சூழலில் நவ. இறுதியான தற்போது மீண்டும் மழை தீவிரம் அடைந்துள்ளது. ஒரு வாரமாக மழை அவ்வப்போது பெய்து வந்த சூழலில் நேற்று காலை முதலே பரவலான மழை பெய்தது. இதன் எதிரொலியாக பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு அளித்து கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட கூடுதல் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி வருகிறது. நேற்று மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி என அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. வைப்பாறு, மேல் வைப்பாறு, குண்டாறு வடிநிலங்களில் உள்ள 342கண்மாய்களில் 50நுாறு சதவீதமும், 33கண்மாய்கள் 76-99 சதவீதமும், 31கண்மாய்கள் 51-75 சதவீதமும், 43கண்மாய்கள் 26-50 சதவீதமும், 174கண்மாய்கள் 1-25 சதவீதமும் நிரம்பி உள்ளன. 11கண்மாய்கள் நிரம்பவே இல்லை. ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 700க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மெல்ல மெல்ல நிரம்பி வருகின்றன. பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக செண்பகத்தோப்பு பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மம்சாபுரம் கண்மாய்கள் நிரம்பி ஸ்ரீவில்லிபுத்துார் நகர் பகுதி கண்மாய்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மீன் வெட்டி பாறையில்மழை நீர் குற்றாலம் அருவிபோல் கொட்டியது. வாழைக்குளம், வேப்பங்குளம், அமுதகுளம், மறவன் குளம், திருமாலை வணங்கினான் குளம், ரெங்கப்ப நாயக்கர் குளம் நிரம்பி ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம்,கொடிக்குளம், கான்சாபுரம், பெரியகுளம், விராகசமுத்திரம் கண்மாய்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் மாவரிசி அம்மன், முள்ளிக்கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிளவக்கல் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 47.56 அடிக்கு தற்போது 35.96அடி நிரம்பி திறந்து விடப்பட்டுள்ளது. கோவிலாறு 42.65 அடிக்கு 20.90 அடி உள்ளது. சாஸ்தாகோவில் நீர்தேக்கத்தில் 32.81 அடிக்கு 30.18 அடி உள்ளது. கோல்வார்பட்டி அணையில் 18.04 அடிக்கு 8.19 அடியும், ஆனைக்குட்டம் அணையில் 24.60 அடிக்கு 6 அடியும், குல்லுார் சந்தை அணையில் 16.68 அடிக்கு 15.78 அடியும், இருக்கன்குடி அணையில் 22.30 அடிக்கு 16.47 அடியும், வெம்பக்கோட்டை 22.95 அடிக்கு 20.96 அடியும் நீர்மட்டம் உள்ளது. பெரியாறு அணைக்கு அதிகளவில் தண்ணீர் வரத்துள்ள நிலையில் 153 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையினர் அணையின் பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை