| ADDED : ஏப் 19, 2024 04:48 AM
விருதுநகர் அதனை சுற்றியுள்ள புறநகர், ஊரகப்பகுதிகளில் பருப்பு மில், பட்டாசு, தீப்பெட்டி ஆகிய தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கட்டுமான பணியாளர்கள், லோடு மேன் பணிகளுக்கு செல்பவர்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதனால் தினமும் வேலைக்கு சென்றால் தான் ஊதியம் என்ற நிலையில் மிகக்குறைந்த வருமானத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகளை வாங்கி வந்து பதுக்கி வைத்து இது போன்ற அன்றாடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை குறி வைத்து சிலர் விற்பனை செய்கின்றனர்.மேலும் லாட்டரி வாங்கியவர்களுக்கு ரூ. 1 லட்சம் விழுந்துள்ளது. நீங்களும் வாங்கினால் லட்சாதிபதி ஆகி விடலாம் என்ற பொய்யான ஆசை வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். விருதுநகரில் சமீபகாலமாக லாட்டாரி விற்பனை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது.விருதுநகர் ஆத்துமேடு சிவந்தி புரத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் 49. இவர் கேரளா மாநிலத்தின் லாட்டாரிக்களை பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.அதே போல சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி 63. இவர் ஏப். 14 மதியம் 12: 45 மணிக்கு கட்டனார்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை வேலைக்கு செல்பவர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்து வந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இந்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.இது போன்று லாட்டாரி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தேர்தல் நேரம் என்பதால் அதிகாரிகள், போலீசார் தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளனர். இந்த சூழ்நிலையை லாட்டரி விற்பனை செய்பவர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொழிலாளர்களிடம் சர்வ சாதரணமாக விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் போலியான லாட்டரிகளையும் தொழிலாளர்களிடையே விற்பனை செய்து ஏமாற்றி வருகின்றனர். எனவே தடை செய்த லாட்டரிகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.