| ADDED : டிச 27, 2025 06:07 AM
சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவ மனையில் மத்திய அரசு சார்பில் ரூ.32.5 கோடியில் நவீன தீவிர சிகிச்சை பிரிவு, தாய் சேய் நல மையம் கட்டும் பணிகள் 95 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.23.75 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட நவீன தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ரூ.8.79 கோடியில் தாய் சேய் நல மையம் கட்டுமான பணிக்கு 2024 பிப். 25 ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த புதிய கட்டடம் 70,321 சதுர அடி பரப் பளவில் தரைத்தளத்துடன் சேர்த்து மொத்தம் 7 தளங்களை கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ ஆய் வகம், டிஜிட்டல் எக்ஸ்ரே, யுஎஸ்ஜி, எக்ஸ்லாம்சியா ஆய்வகம், 26 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு, தாய்ப்பால் வங்கி, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி 4 அறுவை சிகிச்சை அரங்கு அமைய உள்ளது. இந்த கட்டுமான பணி நிறைவடைந்தால் சிவகாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 139 படுக்கை வசதிகள், பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாக விரிவடையும். 18 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. ரோடு அமைத்தல் உள்ளிட்ட சிறு சிறு வேலைகள் மட்டுமே உள்ளது. அதே சமயத்தில் மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்பு வதுடன் கூடுதல் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைமை மருத்துவ அதிகாரி அய்யனார் கூறுகையில், கட்டடப் பணிகள் முடிந்து விட்டது. தற்போது 60 சதவீதம் மருத்துவ உப கரணங்கள் வந்து விட்டது. இந்த உப கரணங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. கட்டில் உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்கள் வந்துவிட்டது. மீதம் உள்ள மருத்துவ உப கரணங்கள் கொண்டுவரப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும், என்றார்.