| ADDED : ஜூலை 29, 2024 12:15 AM
நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ப அனைத்து திட்டங்களையும் மாற்றி அமைத்து, டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு திட்டங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைன் சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்றுகளை பெறுவது, அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது, அரசு தேர்வுகள், வங்கி பண பரிமாற்றம், ரயில், பஸ், விமானம், மின் கட்டணம், ஆன்லைன் வகுப்புகள், வர்த்தகங்கள் என பல்வேறு சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.குறிப்பாக கிராமப்புற மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இது வரவேற்கத்தக்க திட்டம் என்றாலும், மாவட்டத்தில் இன்னும் பல்வேறு கிராமப்புறங்களுக்கு இணையதள சேவை சரிவர கிடைக்கவில்லை. வங்கி பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் நடக்கின்றன. ஆனால் இணைய சேவை மெதுவாக கிடைப்பதால் கிராமப்புறங்களில் முழுமையாக நடப்பதில்லை.இணையதளம் மூலம் பெறக்கூடிய திட்டங்கள் அந்தந்த கிராமங்களில் கிடைக்காததால் வளர்ச்சித் திட்டங்கள் கேள்விக்குறியாகி உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சி கிராமப்புறங்களின் முன்னேற்றத்தில் தான் இருக்கிறது. பெரும்பாலான கிராமங்களில் இணையதள சேவை இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது. எனவே அனைத்து கிராமங்களிலும் முழுவீச்சில் இணைய சேவை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.