| ADDED : மே 19, 2024 11:38 PM
மாவட்டத்தில் கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. மாநில பேரிடர் மேலாண்மை துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெப்ப அலையால் பல்வேறு நீர்நிலைகளில் குறைந்து வந்த நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர துவங்கி உள்ளது.கண்மாய்கள், குளம், குட்டை, ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பும் சூழல் உள்ளது. பெரும்பாலான கண்மாய்கள், வரத்து கால்வாய்கள், குளம், குட்டைகள், ஊருணிகள் பராமரிப்பு இல்லாததால் கண்மாய்க்கு நீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுவதுடன், கரைகள் சேதமடைந்துள்ளன.தற்போது பெய்யும் கனமழைக்கு நீர் நிலைகள் நிரம்பும் பட்சத்தில் வலுவிழுந்த கரைகள் தாக்குப் பிடிக்க முடியாமல் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.தண்ணீர் வீணாவதுடன், கன மழைக்கு நீர் வெளியேறும் போது குடியிருப்பு பகுதிகள் புகுந்து மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த மழைக்கு பின் ஜூனில் தென்மேற்கு பருவமழையும் வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நீர்நிலைகளின் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் கரைகளின் உறுதிதன்மையை ஆய்வு செய்வது அவசியம்.கோடை மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லையென்றாலும், இப்போது கரைகளை ஆய்வு செய்து பலப்படுத்தி வைப்பது வரும் பருவமழைக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்கும். மேலும் கரைகளை பலப்படுத்துவதன் மூலம் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் உயர நல்ல தருணமாக இருக்கும்.இந்த சூழலை தவறவிட்டால் மீண்டும் வறட்சியை சந்திக்க நேரிடும். கரைகளை ஆய்வு செய்து பலப்படுத்த போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.