உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குறைந்த பட்ச ஊதியம் பின்பற்றப்படுவது அவசியம்! தேவை தொழிலாளர் நலத்துறை ஆய்வு

குறைந்த பட்ச ஊதியம் பின்பற்றப்படுவது அவசியம்! தேவை தொழிலாளர் நலத்துறை ஆய்வு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பணியிடங்களில் பணிபுரியும் தினக்கூலிகளுக்கு குறைந்த பட்ச ஊதிய முறை பின்பற்றப்படுகிறதா என தொழிலாளர் நலத்துறை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.முன்னேற துடிக்கும் மாவட்டம் என்பதால் விருதுநகரில் இன்னும் பல பகுதிகளில் தொழில் வளர்ச்சி, நிர்வாக மேம்பாடு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதியினர் ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார், அருப்புக்கோட்டை நகர்ப்பகுதிகளுக்கு வேலை தேடி வருகின்றனர். அனைத்து வகை உடலுழைப்பு பணிகளையும் செய்கின்றனர். அமைப்பு சாராதும் பணிபுரிவோர் அதிகம் உள்ளனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த தினக்கூலிக்கான குறைந்த பட்ச ஊதிய முறையை பின்பற்றாமல் பலர் உள்ளனர். குறைந்த பட்ச ஊதியம் பின்பற்றுவதை தொழிலாளர் நலத்துறை அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். ஆய்வில் பிடிபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.குழந்தை திருமணத்தை போல் 16, 17 வயதில் உள்ள வளரிளம்பருவ தொழிலாளர்களும் பணியமர்த்துவது கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். வளரிளம் பருவ குழந்தைகள் பணிக்கு வருவதற்கு பெற்றோரின் குறைவான ஊதியமும் ஒரு காரணமாக உள்ளது. பிளஸ் டூ முடித்து விட்டு உயர்கல்விக்கு செல்லாமல் பெற்றோரின் குறைந்த ஊதியம் காரணமாக பல்வேறு பணிக்கு வரும் வளரிளம் பருவத்தினர் அதிகரித்துள்ளனர். குறைந்த பட்ச ஊதிய விவரம் பற்றி தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் இதற்காக கூட்டம் போட்டு நிர்ணயிப்பது தொடர்பான துண்டு பிரசுரங்களையும், நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விவரங்களையும் தொழிலாளர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பணிநிலைகளின் அடிமட்டத்தில் இருக்கும் இவர்களை அதிகாரிகள் கண்டு கொள்வதே கிடையாது. ஆகவே மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியமுறை அனைத்து பணிகளிலும் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்து, பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத்துறை ஆய்வை துரிதப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ