ராஜபாளையம்: மகளிர் சுகாதார வளாகம், ரோடு, மின்விளக்கு வசதி, மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் தவிக்கின்றனர் ராஜபாளையம் நகராட்சி 18வது வார்டு மக்கள்.இந்த வார்டில் எம்.ஜி.ஆர் நகர் 1,2 மருதுநகர், காமராஜர் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட மெயின் தெருவுடன் பல குறுக்கு தெருக்கள் உள்ளன.எம்.ஜி.ஆர் நகரில் அடிப்படை வசதிகளான ரோடு, வாறுகால் வசதி, குடிநீர் முறையாக செய்து பெறப்படவில்லை. கொத்தங்குளத்தில் இருந்து சத்திரப்பட்டி செல்வதற்கான இணைப்பு ரோடாக உள்ள இப்பகுதியில் ஆட்டோ செல்லும் ரோட்டினை குறுகலாக வைத்துள்ளனர். தேவையான மின்விளக்கு அமைக்காததால் இரவு நேரங்களில் இருட்டில் தவிக்கின்றனர். சஞ்சீவி மலையில் இருந்து வெளியேறும் மழை நீர் முறையாக செல்வதற்கான வடிகால்களை ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருப்பதால் மக்கள் சிக்கலில் தவிக்கின்றனர். இந்த வார்டில் உள்ள நில அமைப்பு வனத்துறை, ரயில்வே, கோயில் நிலம் என்ற முறையில் முறையாக வகைப்படுத்தப்படாமல் புதிய குடியிருப்புகள் உருவாகி பட்டாவிற்காக காத்திருக்கின்றனர்.மழைக்காலங்களில் வடிகால் நீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது. அவசர தேவைக்கும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நுழைய முடியாத படி ரோடு அமைப்புகளால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.மலையை ஒட்டிய பகுதியில் வீடுகள் கட்டி உள்ளதால் குப்பை வாகனங்கள் அணுக முடியாததால் குப்பை குவிப்பதும், சாக்கடை பணிகளை ஆட்கள் பற்றாக்குறையால் வாறுகால்களில் கழிவுநீர் தேங்குகிறது. திறந்த வெளி அவலம்
பீமா, குடியிருப்பாளர்: அடித்தட்டு மக்கள் அதிகம் உள்ளதால் தனிநபர் கழிப்பறை வசதி இல்லை. இதனால் சஞ்சீவி மலை அடிவாரம், ரயில்வே தண்டவாள பகுதிகளை திறந்த வெளியாக பயன்படுத்துகிறோம். சமூக விரோதிகள், விஷ பூச்சிகளின் தொல்லைக்கு ஆளாகிறோம். --குடிநீருக்கு அல்லல்
பிரேமா, குடியிருப்பாளர்: குடிநீர் இணைப்பு வசதி இல்லாததால் நகராட்சி தண்ணீர் லாரிகளையே நம்பி உள்ளோம். 15 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை இருப்பதால் குடிநீருக்கு அல்லல் ஏற்படுவதோடு புழக்கத்திற்கான நீரையும் அருகாமை பகுதிகளுக்கு தேடிச் செல்ல வேண்டி உள்ளது. ரோ டு வசதி இல்லை
ஸ்டாலின், குடியிருப்பாளர்: ரயில்வே கேட் பகுதியில் இருந்து எம்.ஜிஆர் நகர் முதலாவது குடியிருப்பு வரை முறையான ரோடு வசதி இல்லை. பாதி பகுதியில் ரயில்வே நிர்வாகத்திற்கான இடமாக இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் மண் ரோடு அல்லது பராமரிப்பு செய்து தர வேண்டும். புறக்கணிப்பில் உள்ளோம்
சோலைமலை, கவுன்சிலர்: அடிப்படை வசதிக்காக நகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து முறையிட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற வகையில் புறக்கணிப்பு ஏற்படுகிறது. மருதுபாண்டி நகரில் தாமிரபரணி குடியிருப்பில் 150 வீடுகளுக்கு பல வருடங்களாக இணைப்பு வழங்கவில்லை. ரயில்வே கேட்டிலிருந்து எம்.ஜி.ஆர் நகர் முதலாவது பகுதி வரை தற்காலிக மண் ரோடு ஏற்பாடு செய்ய கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. சுகாதார தேவைக்கு துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம் கூறுகின்றனர்.