விருதுநகர்:''நான்கரை ஆண்டு காலம் பழனிசாமி முதல்வராக நீடித்ததற்கு முழுமுதல் காரணம் பிரதமர் மோடி தான்'' என விருதுநகரில் நடந்த அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.மேலும் அவர் பேசியதாவது:தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் இது. எம்.ஜி.ஆர்.,க்கு பின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியை கட்டிக்காத்தார். இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என பலர் போட்ட சதிகள், பொய் வழக்குகளை மீறி ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட பெரும் இயக்கமாக மாற்றினார். கட்சியின் விதியை மாற்றி தொண்டர்களை ஏமாற்றி உள்ளார். நீங்களாகவே ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அ.தி.மு.க., தொண்டர்களும் ஒன்று கூடி எம்.ஜி.ஆர்., கூறிய விதியை ரத்து செய்ய நீ யார் என்று ஓட ஓட விரட்டும் காலம் வந்து கொண்டிருக்கிறது.பழனிசாமி முதல்வராகும் போது அவர் கூறியது போல தவழ்ந்து தவழ்ந்து தான் போனார். பதவி கொடுத்த சசிகலாவுக்கு நீங்கள் காட்டிய நன்றியை உலகம் அறியும். நான்கரை ஆண்டு காலம் பழனிசாமி முதல்வராக நீடித்ததற்கு முழுமுதல் காரணம் பிரதமர் மோடி தான். அவர் தான் பல பிரச்னைகளில் இருந்து காப்பாற்றினார். தேர்தல்களில் தோல்வி
தேவையில்லாத பிரச்னையை உருவாக்கி ஒன்றுபட்டு பல சரித்திர வெற்றிகள் குவித்த கட்சியை பிளவு பட செய்துள்ளார். முதல்வரான பின்னும், தற்போது எதிர்க்கட்சி தலைவரான பின்னும் பழனிசாமி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளார். ஈரோடு கிழக்கு தேர்தலில் நமது எதிரி தி.மு.க., தான். ஓட்டுக்கள் சிதறக்கூடாது என்பதற்காக நான் தான் சின்னத்தை விட்டு கொடுத்தேன். அப்படியிருந்தும் தோல்வியை தழுவி விட்டார். சர்வாதிகாரத்தினால் தான் இந்த நிலை. வெற்றி பெற வேண்டும் என்றால் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க., உருவாக்கப்பட்டதோ, அதற்காக மீண்டும் ஒருங்கிணைந்து ஒன்று பட்டு செயல்பட வேண்டும்.நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். நடக்க போவது நல்லதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மக்களுக்கு சந்தேகம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த நல்ல நல்ல திட்டங்கள் பலவற்றை தி.மு.க., அரசு நிறுத்தி உள்ளது. நாம் ஒன்று பட்டு நின்றால் அவர்களை எதிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம். ஆனால் தொடர்ந்து ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்காக பழனிசாமி அ.தி.மு.க.,வை பிளவு படுத்தி உள்ளதாக மக்கள் பேசுகின்றனர். கோடநாடு வழக்கிலும் தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. உலகத்திலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் கூட்டணி வைத்துள்ளதோ என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது.நானும், சசிகலா, டி.டி.வி., தினகரன் ஆகியோரும் ஒன்றுபட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதுவே என் விருப்பமும். நான் தயாராக உள்ளேன். அவர்களும் தயாராக வேண்டும். ஒன்று பட்டு வெற்றி பெற்று அ.தி.மு.க.,வை மீட்க வேண்டும் என்றார்.