காரியாபட்டி : மாவட்டத்தில் அமைக்கப்பட்ட அம்மா பூங்காக்கள் சரிவர பராமரிக்காதது, உபகரணங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையால் இளைஞர்களின் உடற்பயிற்சி, திறமை கேள்விக்குறியாகிறது. அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. இதனை பராமரித்து மக்களுக்கு பொழுது போகிற சூழலையும், இளைஞர்களின் உடற்பயிற்சி, திறமையை ஊக்குவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகர்ப்புற இளைஞர்களுக்கு கல்வி, விளையாட்டு, திறமைகளை வளர்க்க போதுமான சூழல்கள் உள்ளன. கிராமப்புற இளைஞர்களிடம் ஏராளமான திறமைகள் இருந்தும், உடற்பயிற்சி மையங்களோ, பயிற்சியாளர்களோ பெரும்பாலும் இருப்பதில்லை. இந்நிலையில் தான் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், மக்களுக்கு பொழுது போகிற சூழலையும் ஏற்படுத்த ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சி துறை சார்பாக ரூ. 30 லட்சம் செலவில் அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் சத்திர ரெட்டியாபட்டி, ஆவியூர், பந்தல்குடி, திருச்சுழி, தேவர்குளம், கிருஷ்ணாபுரம், எட்டக்காப்பட்டி, மகாராஜபுரம், படிக்காசு வைத்தான்பட்டி, வெங்கடாசலபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன. மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இதில் ரூ. 20 லட்சம் ஒதுக்கப்பட்டு குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு பலகை உள்ளிட்ட உபகரணங்களும், ரூ. 10 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டன. இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஒரு சில மாதங்கள் மட்டுமே இயங்கிய நிலையில் போதிய பராமரிப்பு இன்றி போனது. பெரும்பாலான இடங்களில் உடற்பயிற்சி செய்ய முடியாமல் இளைஞர்கள் தவியாய் தவிக்கின்றனர். பொழுதுபோக்க இடம் இல்லாமல் மக்கள் இறுகிய மனநிலையில் உள்ளனர். சில இடங்களில் தண்ணீர் வசதி இல்லாமல் கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. உடற்பயிற்சி உபகரணங்கள் உடைக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன. குடிநீர் வசதி கிடையாது.பெரும்பாலான உள்ளாட்சிகளில் தி.மு.க., வைச் சேர்ந்தவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். அவர்கள் பராமரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்கிற புகார் உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இன்னும் சில காலங்களில் காணாமல் போகும் நிலை உள்ளதால் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகி உள்ளது. பராமரிப்பின்றி உள்ள அனைத்து பூங்காக்களையும் பராமரித்து உபகரணங்களை சீரமைத்து பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.