பஸ் ஸ்டாண்ட் திறக்காததால் வெயிலில் தவிக்கும் பயணிகள்
காரியாபட்டி : காரியாபட்டியில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து திறக்கப்படாதாதல் முக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பஸ்களை நிறுத்தி, ஏற்றி, இறக்குவதால் பயணிகள் கடும் வெயிலில் நின்று தவியாய் தவிப்பது, ரோட்டோரம் நிற்கும் மின் கம்பங்களால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது, அகலமான ரோடு இருந்தும் ஆக்கிரமிப்பின் பிடியல் சிக்கி போக்குவரத்திற்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்துவது என காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர். காரியாபட்டியில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி நடைபெற்று, முடிவடைந்து, திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. முக்கு ரோடு, பஸ் ஸ்டாண்ட் வெளியே மதுரை அருப்புக்கோட்டை ரோடு, கள்ளிக்குடி- திருச்சுழி ரோடு ஆகிய இடங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். தற்போது கோடை காலத்தை விட கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.திறந்தவெளியில் பயணிகள் நிற்கின்றனர். கடும் வெயிலால் தவியாய் தவிக்கின்றனர். குடிநீர் வசதி இல்லாததால் தாகத்தை தணிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதைவிட முக்கியமான பிரச்னை கழிப்பிட வசதி இல்லாததால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பெரும்பாலான வீதிகள், ரோட்டோரங்களில் மின் கம்பங்கள் உள்ளன. தற்போது அனைத்து ரோடுகளையும் விரிவாக்கம் செய்து, இரு வாகனங்கள் எளிதில் விலகிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மின்கம்பங்கள் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது. செவல்பட்டியில் இருந்து பஜார் வரை, திருச்சுழி - கள்ளிக்குடி ரோடு பைபாஸ் வரை ரோடு அகலமாக உள்ளது. டூவீலர்கள், மினி வேன்கள், ஆட்டோக்கள் என ரோட்டை மறைத்து நிறுத்துவதால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. தற்போது வாறுகால் கட்டும் பணி நடைபெற்று வருவதால் ஒருவழிப்பாதையாக இருந்து வருகிறது. போதிய அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் தவியாய் தவிப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.