| ADDED : டிச 25, 2025 06:01 AM
நரிக்குடி, நரிக்குடியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். நரிக்குடியை சுற்றி 160க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போது திருச்சுழி தாலுகாவில் உள்ளது. மாவட்டத்தின் கடைசியில் உள்ள கருவக்குடி, மினாக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் அரசு சலுகைகள், பட்டா மாறுதல், சான்றிதழ்கள் பெற திருச்சுழிக்கு, 30 கி.மீ., தூரம் பயணம் செய்து தாலுகா அலுவலகத்திற்கு வர வேண்டும். விவசாயிகளின் அன்றாட வேலை பாதிக்கப்படுவதுடன், வருமானம் கேள்விக்குறியாகிறது. வருவாய்த் துறையை பொறுத்தவரையில் எந்த ஒரு காரியத்திற்கும் உடனடியாக தீர்வு கிடைப்பது என்பது அரிது. பலமுறை அலைந்தால் மட்டுமே தீர்வு ஏற்படும். அவ்வாறு இருக்கும் போது, கூலி வேலையை விட்டுவிட்டு தாலுகா அலுவலகத்திற்கு அழைவது என்பது இயலாத காரியமாக இருந்து வருகிறது. கூடுதல் செலவு, சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு செலவுகளால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நரிக்குடியை தாலுகாவாக அறிவித்தால் அப்பகுதி மக்கள் எளிதில் வந்து செல்ல முடியும். தங்களது குறைகளை பூர்த்தி செய்ய மனு கொடுத்து, எளிதில் கூலி வேலைக்குச் செல்ல முடியும். இது போன்ற காரணங்களுக்காக நரிக்குடியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக அறிவிக்கப்படுவதோடு சரி, அதற்குப் பின் கண்டுகொள்வது கிடையாது. இனியாவது நரிக்குடியை தாலுகாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.