உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதில் சிக்கல்

பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதில் சிக்கல்

ஏழை எளிய மாணவர்களுக்காக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நிதி உதவி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மத்திய அரசு 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மத்திய அரசின் நிதி உதவி பெறுவதற்காக தகுதித் தேர்வு நடத்துகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ2000 வழங்குகிறது.அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மாநில அரசும் உயர்கல்வி கற்பதற்காக மாதம் தோறும் ரூ 1000 கல்வி உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இந்த கல்வி உதவித்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் வர வைக்கப்பட வேண்டும். இதில் மத்திய அரசு தரும் கல்வி உதவித்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் வர வைப்பதற்கு மாற்றாக அந்தந்த பள்ளிகளுக்கு நிதி அனுப்பப்பட்டு பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் தற்போது அரசுகள் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்துவதற்காக மாணவர்கள் தங்கள் வங்கி கணக்குகளுடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. மாவட்டத்தில் பல அரசு,அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இதன் விவரம் தெரியாத நிலை உள்ளது. இதனால் பல மாணவர்கள் அரசு உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தும் உதவித்தொகை கிடைக்காமல் உள்ளது.பல மாணவர்கள் போஸ்ட் ஆபீஸ், தனியார், அரசுடைமை வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்கியுள்ளனர் .ஆனால் தங்கள் கணக்குடன் ஆதார் எண் சேர்க்கப்பட்டுள்ளதா என கவனிப்பதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் வங்கிகளில் ஆதார் ஜெராக்ஸ் கொண்டு சென்று தங்கள் கணக்குகளில் சேர்த்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தற்போது அரசு தரும் உதவித் தொகையை பெறுவது மட்டுமின்றி எதிர்காலத்தில், அரசின் அனைத்து நல உதவி திட்டங்களும் வங்கி மூலம் பெற முடியும்.பள்ளிகளில் அட்மிஷன் நடைபெறும் இந்த தருணத்திலாவது பெற்றோர்விழித்துக் கொண்டு விழிப்புடன் செயல்பட்டு அரசின் நிதி உதவிகளை மாணவர்கள் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி