| ADDED : டிச 31, 2025 05:54 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி விலக்கில், சுரங்கப்பாதை அமைப்பதற்கு பல ஆண்டுகளாக காலம் தாழ்த்துவதாக கூறி அப்பகுதியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். வடமலைக்குறிச்சி விலக்கில் நான்குவழிச் சாலையை கடக்க சுரங்கப்பாதை இல்லாததால் வடமலைகுறிச்சியில் இருந்து கல்லுப்பட்டி செல்லும் 10 கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளால் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டத்தின் போது சர்வீஸ் சாலை அமைத்து தருவதாக எம்.எல்.ஏ., சீனிவாசன் உறுதி அளித்தார். அதற்காக ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து கலெக்டர், எம்.எல்.ஏ., ஆகியோர் சுரங்கப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வடமலைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.