உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆவியூர் வெடிவிபத்துக்கு பின் குவாரி சோதனைகள் தீவிரம்: கள ஆய்வை முடுக்கி விட்ட மாவட்ட நிர்வாகம்

ஆவியூர் வெடிவிபத்துக்கு பின் குவாரி சோதனைகள் தீவிரம்: கள ஆய்வை முடுக்கி விட்ட மாவட்ட நிர்வாகம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஆவியூர் வெடிவிபத்துக்கு பின் குவாரி சோதனைகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே ஒரு மாதம் முன் நடந்த ஆய்வுகளின் பாது 4 குவாரிகளின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது தீவிர கள ஆய்வை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.மாவட்டத்தில் உடைகல் குவாரிகள் 113, சுண்ணாம்பு கல் குவாரிகள் 29, கிரானைட் குவாரிகள் 36 உட்பட 190 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பொதுவாக குவாரிகளுக்கு சுரங்க திட்டம் என்ற ஒன்று கனிமவளத்துறையால் வழங்கப்படும். அத்திட்டத்தில் எவ்வளவு ஆழம் கனிமம் எடுக்கப்பட வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட பகுதிகளின் பரப்பு குறித்து தெளிவுப்படுத்தப்பட்டிருக்கும். இந்த திட்டம் ஒவ்வொரு குவாரிக்கும் ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்படும். இதை அந்தந்த குவாரி உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் முறைப்படி பின்பற்ற வேண்டும் என்பது விதி. இதை கனிமவளத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வர். அதே போல் வி.ஏ.ஓ.,க்கள் தங்கள் எல்லை பகுதிக்குள் வரும் குவாரிகள் அனைத்தையும் கட்டாயம் மாதம் ஒரு முறையாவது ஆய்வு செய்ய வேண்டும். வருவாய் ஆய்வாளர்கள் தங்கள் எல்லைக்குள் வரும் 75 சதவீத குவாரிகளை மாதம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். தாசில்தார்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட 50 சதவீத குவாரிகளை மாதம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.இத்தனை விதிமுறைகள் இருந்தும் காரியாபட்டி ஆவியூர் குவாரியில் வெடிவிபத்து நடந்துள்ளது. இந்த குவாரியில் அனுமதித்ததை விட ஆழமாக தோண்டியது கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வில் நேற்று முன்தினம் கண்டறியப்பட்டு அதன் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தாலும், இந்த விபத்துக்கு பின் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் தினசரி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சுரங்கத்திட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என வருவாய்த்துறை, கனிமவளத்துறையினர் ஆய்வு செய்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விதிமீறிய 4 குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை