உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்! நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் ஆபத்து

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்! நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் ஆபத்து

மாவட்டத்தில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த குளம், குட்டை, ஊருணிகளை வெட்டினர். வரத்து கால்வாய்களை ஏற்படுத்தினர். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து 20 அடி ஆழத்தில் தண்ணீர் எடுத்தனர். நீர் நிலைகள் நிரம்பி இருந்ததால் விவசாயம் செழித்தது. கால்நடைகள் எளிதாக வளர்த்தனர். ஆனால் இன்று சரிவர மழை இல்லாதது, நீர்நிலைகள் வறண்டு, வரத்து கால்வாய் துார்ந்து போய் உள்ளன.அதற்கு பின் நீர் நிலைகளை சரி வர சீரமைக்காததால், அவ்வப் போது பெய்த மழை நீரை சேமிக்க முடியாமல் போனது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து. 20 அடி ஆழத்தில் கிடைத்த தண்ணீர் 200 அடி ஆழத்திற்கு சென்றது. அதற்குப் பின் 600 அடி 800 அடி ஆழம் வரை சென்று விட்டது. இதை கருத்தில் கொண்டு மழை நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து வீடுகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதை அரசு கட்டாயமாக்கியது.மழை நீர் சேமிப்பு தொட்டி அமைத்த பின் மழை நீரை சேமிக்க முடிந்தது. நிலத்தடி நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்தது. 300, 400 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. காலப்போக்கில் மழை நீர் சேகரிப்பு தொட்டியை முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டனர். பெரும்பாலான வீடுகள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டன. பெய்யும் மழை நீரும் சேமிக்காமல் வீணாகிறது.தற்போது வெப்ப அலையோடு, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது பெரிய பிரச்னையாக உள்ளது. தற்போது கோடை காலம் துவங்கியதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வறட்சியான பகுதிகள்.மழைநீர் சேகரிப்பு தொட்டி சரிவர செயல்படாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு அவசியம் என்பதை உணர்த்த மக்களிடத்தில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை