| ADDED : நவ 21, 2025 04:49 AM
விருதுநகர்: விருதுநகரில் கட்டபொம்மன் தெரு, புதுத்தெரு, பள்ளிவாசல் தெரு, காசுக்கடை பஜார் பகுதிகளில் கலங்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. விருதுநகரில் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோக இடைவெளி குறைந்துள்ளது. இருப்பினும் திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்காலங்களில் குடிநீர் கிணறுகள் தாமிரபரணி ஆற்றின் நீர்மட்டத்தால் மூழ்கடிக்கப்பட்டால் வினியோகம் இருக்காது. அது முடிந்த பிறகும் கலங்கல் குடிநீர் வினியோகம் ஆகும். காரணம், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம். ஆனால் தற்போது திருநெல்வேலியில் அது போன்ற சூழல் இல்லாத சூழலிலும், விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் கலங்கல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக கட்டபொம்மன் தெரு, புதுத்தெரு, பள்ளிவாசல் தெரு, காசுக்கடை பஜார் பகுதிகளில் நேற்று வினியோகமான குடிநீர் கலங்கலாக குளோரின் கலக்காமல் இருந்தது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக வினியோகிக்கும் குடிநீரை 'குளோரினைஷேசன்' செய்ய வலியுறுத்தப்பட்டது. அதை விருதுநகர் உள்ளிட்ட எந்த நகராட்சியும் செய்யவில்லை. குடிநீர் கலங்கலாக இருப்பதால் மக்கள் குடிக்க பயன்படுத்த அஞ்சுகின்றனர். தற்போது சீதோஷ்ண நிலை காரணமாக குடிநீர் அவசியமாக உள்ள சூழலில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.