உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடுகளில் தெருவிளக்குகள் இல்லை: கும்மிருட்டால் திருட்டு வழிப்பறி, விபத்து அபாயம்

நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடுகளில் தெருவிளக்குகள் இல்லை: கும்மிருட்டால் திருட்டு வழிப்பறி, விபத்து அபாயம்

விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடுகளில் தெருவிளக்குகள் இல்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. புறநகர்ப்பகுதிகளில் பிரச்னை இல்லை என்றாலும், நகர்ப்பகுதிகளிலும் இதே நிலை தான் தொடர்கிறது. நகரின் விரிவாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெருவிளக்குகள் அத்தியாவசியமானவையாக உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் தைரியமாக செல்ல முடியும். ஆனால் தற்போதோ வாகன வெளிச்சத்தை அடிப்படையாக கொண்டு பாதசாரிகள் சர்வீஸ் ரோட்டில் நடக்க வேண்டியுள்ளது. விருதுநகர் நுழையும் இடமான அரசு போக்குவரத்து பணிமனை அமைந்துள்ள சர்வீஸ் ரோட்டில் தெருவிளக்குகள் அறவே இல்லாததால் பாதசாரிகள் பணிமுடிந்து திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து பல ஆண்டுகளாக புகார் உள்ளது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது அலட்சியம் செய்கிறது. அதே போல் அருப்புக்கோட்டை காந்தி நகர் சர்வீஸ் ரோடு இருபுறமும் தெருவிளக்கு இல்லை. சென்னையில் இருந்து வரும் பஸ் எல்லாம் அங்கு தான் நிற்கும். அதிகாலை 12:00 மணிக்கு பஸ் வருவதால் பெண்கள் அங்கு தனியே நின்று பஸ் ஏற பயப்படுகின்றனர். காரியாபட்டியில் கல்குறிச்சி, டோல்கேட் சர்வீஸ்ரோடுகளில் வெளிச்சம் இல்லை.சாத்துாரில் நடராஜர் தியேட்டர் ரோடு, ஆண்டாள்புரம் விலக்கு, பழைய படந்தால் ரோடு, காமராஜர்புரம் முதல் தெரு ஆகிய சர்வீஸ் ரோடுகளிலும் தெருவிளக்குகள் அத்தியாவசியமாக உள்ளது. சர்வீஸ் ரோட்டில் தெருவிளக்கு போடுவது உள்ளாட்சி அமைப்பா, தேசிய நெடுஞ்சாலை ஆணையமா என நீண்ட விவாதம் உள்ளது. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஹாட்ஸ்பாட் எனப்படும் விபத்து அபாய பகுதிகளில் அதீத வெளிச்சம் தரும் இருபுற மின் விளக்குகளை சர்வீஸ் ரோடுகளிலும் வெளிச்சம் வரும் வகையில் பொருத்தி உள்ளனர். இதை நகரில் வெளிச்சம் தேடும் பகுதிகள் வரை விரிவுப்படுத்தினால், குற்றங்கள் குறையும், விபத்துக்கள் தவிர்க்கப்படும். எனவே சர்வீஸ் ரோடு தெருவிளக்குகளை விரைந்து ஏற்படுத்தி வெளிச்சத்தை அதிகப்படுத்தி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை