| ADDED : டிச 28, 2025 04:12 AM
சிவகாசி: வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், போலீஸ் ஏட்டுவின் மகள், அவரது சகோதரி மகள் ஆகிய இரு சிறுமியர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி; சிவகாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு. இவரது கணவர் ராஜாமணி. இவர்களின் மகன் கவின், 11, மகள் கமலிகா, 9. அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், ராஜேஸ்வரியின் சகோதரி சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தை சேர்ந்த தனலட்சுமி, தன் மகன் நிஷாந்த், 6, மகள் ரிஷிகா, 4, ஆகியோருடன் கொங்கலாபுரம் வந்திருந்தார். நேற்று காலை, 8:00 மணி அளவில் ராஜேஸ்வரி வீட்டின் முன் உள்ள இரும்பு கேட்டில் சிறுமியர் விளையாடினர். அப்போது, கேட்டுடன் சுவர் சரிந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுமியர் பலத்த காயமடைந்தனர். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வீடு நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.