| ADDED : நவ 21, 2025 04:39 AM
விருதுநகர்: புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் பல் சிகிச்சை துறையில் 44 டெக்னீசியன் காலிப்பணியிடங்கள் கடந்த 3 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதனால் மேல் சிகிச்சை என்ற பெயரில் பிற மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு நோயாளிகளை மாற்ற வேண்டிய நிலை தொடர்கிறது. தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் 2022 ஜன.12ல் திறக்கப்பட்டது. இவற்றில் பல் சிகிச்சை துறையில் புதிதாக பற்கள் பொருத்துவதற்கும், சேதமான பற்களை வேர்சிகிச்சை செய்து அதன் மீது தொப்பி பொருத்துவதற்காக 44 டெக்னீசியன் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. மூன்று ஆண்டுகளை கடந்தும் ஒன்று கூட நிரப்பப்படவில்லை. இதனால் புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் வேர்சிகிச்சை, பற்கள் அகற்றம், சுத்தம் செய்தல் ஆகிய சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்படுகிறது. புதிய பற்கள், சேதமான பற்கள் மீது தொப்பி பொருத்துதல், பற்கள் சீரமைப்பு சிகிச்சைகளுக்காக வருபவர்களை பிற மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு அனுப்புகின்றனர். மக்கள் அலைச்சலை தடுக்க 44 பல் சிகிச்சை டெக்னீசியன் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.