| ADDED : செப் 30, 2011 01:22 AM
சிவகாசி : சிவகாசி நகராட்சி தலைவர் பதவிக்கு காங்., போட்டி வேட்பாளராக முன்னாள் நகராட்சி தலைவர் ஞானசேகரன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். சிவகாசி நகராட்சி தலைவர் பதவிக்கு காங்., கட்சியில் சீட் கேட்டு துணைத்தலைவர் அசோகன், முன்னாள் நகராட்சி தலைவர் ஞானசேகரன் கடும் முயற்சி செய்தனர். சென்னையில் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்திய கட்சி தலைமை, இருவரில் யாருக்கு சீட் கொடுத்தாலும், மற்றொருவர் சுயேட்சையாக போட்டியிடாமல் கட்சி வேட்பாளருக்கு பாடுபட வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அசோகனுக்கு சீட் கிடைத்தது. ஞானசேகரன் ஆதரவாளர்கள் சிலருக்கு, வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், நகராட்சி தலைவர் பதவிக்கு ஞானசேகரன் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார். தேசிய லீக் மாவட்ட தலைவர் ஜாகங்கீர் உடனிருந்தார். காங்., கட்சியில் போட்டிவேட்பாளராக ஞானசேகரன் மனுத்தாக்கல் செய்திருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஞானசேகரனை வாபஸ் பெற வைக்க மாணிக்க தாகூர் எம்.பி., மற்றும் கட்சி மேலிட பிரதிநிதி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஞானசேகரன் கூறுகையில்,'' வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை,'' என்றார். இதனிடையே ஞானசேகரன், 33 வார்டுகளில் தனக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க வசதியாக, கவுன்சிலர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் சிலரையும், தே.மு.தி.க.,வினர் சிலருடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.