| ADDED : செப் 25, 2011 09:58 PM
காரியாபட்டி:காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பென்ஞ்ச் இல்லாததால்
மாணவிகள் தரையில் உட்கார்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.காரியாபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இதில் 2
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இடம் பற்றாக்குறை
காரணமாக ஷிப்ட் முறையில் பள்ளி நடத்தி வந்தனர். இதையடுத்து ஆண்கள் மற்றும்
பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக பிரிக்க வேண்டும் என பெற்றோர்கள்
வலியுறுத்தியதையடுத்து இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் ஆண்கள்
மேல்நிலைப் பள்ளிக்கு தனியாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு இந்த
கல்வியாண்டில் புதிய கட்டடத்திற்கு சென்றனர். அப்போது இங்கிருந்த பெஞ்ச்,
டேபிள் என அனைத்து பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டன. தற்போது பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு
பென்ஞ்ச் எதுவும் இல்லாததால் தரையில் உட்கார்ந்து படித்து வருகின்றனர்.
காலையிலிருந்து மாலை வரை தரையில் உட்காருவதால் மாணவிகளுக்கு பல்வேறு
சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆசிரியர்கள் பற்றாக்குறை: வரலாறு, கம்ப்யூட்டர் ,
வணிகவியல், எக்கனாமிக்ஸ் ஆசிரியர்கள் இல்லாததால் பாடம் நடத்துவதில்
சிக்கல் நீடித்து வருகிறது. மாவட்டத்திலே பத்தாம் வகுப்பில் 5 முறையும்,
பிளஸ் 2 வில் இரண்டு முறையும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு
மேல்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. போதிய அடிப்படை வசதிகள்,
கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும்.