| ADDED : அக் 07, 2011 10:33 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தாமதமாக நடப்பதால், வேட்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பாக தகவல்கள் மறைக்கப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரிவுகள் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் அதிகாரிகள் எந்த தகவல்கள் கேட்டாலும் கொடுப்பதில்லை. அனைத்து பணிகளும் தாமதமாக நடப்பதால், வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மனு தாக்கல் முடிந்து மறுநாள் வரை தேர்தல் பிரிவினரால், முழுமையான தகவல்களை தர முடியவில்லை. வேட்பு மனு பரிசீலனையின் போதும், மனு வாபஸ் பெறும் போதும், முழுமையான தகவல்கள் உடனடியாக கிடைப்பதில்லை. தேர்தல் பிரிவு அதிகாரிகள் முதலில் யாரையும் மதிப்பதில்லை. அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என புகார் தெரிவிக்க வந்தால் கண்டு கொள்வதில்லை. வேட்பாளர்கள் தரப்பில் தகவல்கள் கேட்கப்படும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் தெரிவிப்பதில்லை. எது கேட்டாலும் அந்தந்த அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் தரப்பில் கேட்கப்படும் தகவல்களும், முழுமையாக கிடைப்பதில்லை. அனைத்து தகவல்களும் தேர்தல் பிரிவினரால் மறைக்கப்படுவதால், மாநில தேர்தல் கமிஷன் மறைமுகமாகவே அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளதோ என சந்தேகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரிவு குறித்து கலெக்டருக்கு பல முறை புகார் தெரிவித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் பிரிவு தங்களது நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ளும் விதமாக, வெளிப்படையாக தகவல்களை வழங்க முன் வர வேண்டும். இதன் மீது மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.