ஸ்ரீவில்லிபுத்துார்: அரையாண்டு தேர்வு விடுமுறை, பொங்கல் விடுமுறை காரணமாக சென்னை - -செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் கொல்லம், பொதிகை, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஜன.30 வரை வெயிட்டிங் லிஸ்ட் நிலை இருப்பதால் மதுரை, சிவகாசி, தென்காசி வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தற்போது செங்கோட்டை, விருதுநகர் வழித்தடத்தில் தினமும் கொல்லம், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மதுரை, சிவகாசி வழியாக இயங்கி வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ், தாம்பரம்- -செங்கோட்டை ரயில்கள் மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது. கொல்லம் ரயிலில் கேரள மக்கள் அதிகளவில் பயணிப்பதாலும், பொதிகை ரயிலில் தென்காசி மாவட்ட மக்கள் அதிகளவில் பயணிப்பதாலும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை மக்கள் பயணிக்க வெயிட்டிங் லிஸ்ட் நிலை தான், 2026 ஜன. 30 வரை காணப்படுகிறது. தற்போது அரையாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்ப வேண்டிய நிலையிலும், பொங்கல் விடு முறைக்கு சொந்த ஊருக்கு வந்து செல்ல வேண்டிய நிலையிலும் பல ஆயிரம் மக்கள் இந்த ரயில்களில் பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். எனவே, சென்னையிலிருந்து மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் உடனடியாக இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.