| ADDED : ஜன 20, 2024 04:19 AM
ராஜபாளையம்: மாவட்டத்தில் பாசனம், நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளில் குப்பை கொட்டும் இடமாக மாற்றப்படுவதும், கழிவு நீர் சேரும் இடமாகவும் மாற்றுவதால் தண்ணீரையே விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குப்பை கொட்டுபவர்கள், கழிவுநீரை விடுபவர்கள் மீது அரசு அதிகாரிகள் கடும் நடவடிக்கை இல்லாததால் நீர்நிலைகள் கண் முன்னே மாசடைந்து அழிந்து வருகிறது.ராஜபாளையத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் புளியங்குளம், கருங்குளம், பிறண்டகுளம், கொண்டனேரி, புதுக்குளம், அயன் கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய், வாகைகுளம், நகர குளம், பெரியகுளம் என 58 கண்மாய்களும், ஊராட்சி, நகராட்சி சார்பில் நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், குளங்கள் பராமரிக்கப்படுகிறது.நகராட்சி, பேரூராட்சிகள், கிராமங்களை ஒட்டியுள்ள நீர் நிலைகள் அனைத்தும் குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளன. கட்டடக் கழிவுகள் உள்ளிட்ட பொருட்களை வாகனங்களில் கொண்டு வந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி செல்கின்றனர். புதிய குடியிருப்புகளின் கழிவுநீர் வெளியேற்றும் பாதையாக இதுபோன்ற குளங்கள், ஓடைகள் சுலபமான பகுதியாகி விடுகிறது. குடியிருப்பு வாசிகளும் இவற்றின் அருமை தெரியாமல் தங்கள் பகுதி குப்பைகளையும், வியாபாரிகளும் இறைச்சி கழிவு மற்றும் இதர பொருட்களை மக்கள் பார்க்காத நேரமாக பார்த்து வீசுகின்றனர்.சிலபகுதிகளில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் ஊராட்சி நிர்வாகத்தினரே குப்பை கிடங்காக குளங்களையும் கண்மாய்களையும் மாற்றி வருகின்றனர்.இதனால் குளத்தின் நீரை குடிப்பதற்கு பயன்படுத்தி வந்த நிலை சிறிது சிறிதாக மாறி விவசாயத்திற்கும் உபயோகமற்றதாக மாறியுள்ளது. அனைத்து நீர் நிலைகளிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகளும், கழிவுகளும் குவிந்துள்ளது. இவற்றை அகற்றுவது என்பதே சவாலான காரியமாக மாறி உள்ளது.காலப்போக்கில் நிலத்தடி நீரை கழிவுநீராக மாற்றும் இச்செயல்களால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.எனவே நீர் நிலைகள் பராமரிப்பில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு துறையினர் இணைந்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.