குறைதீர் கூட்டத்தில் இல்லை மாற்றுத்திறனாளி வீல்சேர்கள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீல்சேர்கள் வைக்கப்படாததால் மனு அளிக்க வந்தவர்கள் தவழ்ந்தும், தடுமாறியும் சிரமப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று திங்கள் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. 2 வாரங்கள் முன் புதிய கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த குறைதீர் கூட்டம் கடந்த வாரமும், நேற்றும் பழைய கட்டடத்திலே நடக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக குறைதீர் கூட்ட மனுக்களை பதியும் கணினி வசதி பழைய அலுவலக வளாகத்திலேயே உள்ளது என்கின்றனர். நேற்று மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி வெயில் அடித்த நிலையிலும் தவழ்ந்தபடியே வந்தார். பின் மனு அளித்த பின்னும் தவழ்ந்தபடியே சென்றார். பாதியில் வந்ததும், அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரை மீட்டு உதவினர்.ஆனால் வாயிலில் நிற்கும் போலீசாரோ, அரசு ஊழியர்களோ யாரும் முன்வரவே இல்லை. குறிப்பாக வாயிலில் போலீசார் நிற்குமிடத்தில் வீல்சேர்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அதே போல் மனுக்கள் எழுதுமிடத்திலும் வீல்சேர்கள் வைக்கப்பட்டிருக்கும். மேலும் மனுக்கள் வாங்கும் கூட்டரங்குக்கு மாற்றுத்திறனாளிகள் வரவே தனியாக வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வீல்சேர்கள் எதுவும் இல்லாததால் நேற்று மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இனி வரும் கூட்டங்களில் இதை முறைப்படி பின்பற்ற வேண்டும்.