| ADDED : ஜூன் 11, 2024 07:25 AM
மாவட்டத்தில் மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் நான்கு வழிச்சாலை விருதுநகர், சாத்துார் வழியாக செல்கிறது. இதில் பல இடங்களில் வடிகால் பணிகளும், சர்வீஸ் ரோடு பணிகளும் முழுமை அடையவில்லை.இதனால் மழை பெய்தால் சர்வீஸ் ரோட்டில் மழை தேங்குவதும், சர்வீஸ் ரோடுகள் இல்லாத பகுதிகளில் கிராமங்களுக்கு செல்லும் மக்கள் எதிர்திசையில் வந்து விபத்தை சந்திப்பதும் அதிகரித்துள்ளது.அதில் குறிப்பாக வடமலைக்குறிச்சி பிரிவு சர்வீஸ் ரோடு பாலம் அமைப்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இப்பகுதியில் விபத்து நடந்து 5 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இன்று வரை தீர்வு இல்லை.முன்பு தடுப்பை அகற்றி விட்டு மக்கள் எதிர்திசையில் வருவதால் அதை நெடுஞ்சாலை ஆணையம் அடைத்து விட்டது. மேலும் சர்வீஸ் ரோடு பாலம் போடப்பட உள்ள பகுதியில் மண்ணை மெத்தியது. இருப்பினும் மழை பெய்தால் நீரோட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மீண்டும் தடுப்பை அகற்றி விட்டு ரோட்டின் எதிர்திசையில் தான் செல்லும் சூழல் உள்ளது.இதற்கு அடுத்த பகுதியில் பாவாலிக்கு செல்லும் பாதையும் உள்ளது. தற்போது கவுசிகா நதி வறண்டுள்ளதால் வாகன ஓட்டிகள் ஆற்றுப்படுகைக்குள் இறங்கி அதை கடந்து பாவாலி, சந்திரகிரிபுரம், செங்குன்றாபுரம் பகுதிகளுக்கு செல்கின்றனர். ஆட்டோக்கள் செல்ல பாதை இல்லாததால் அவை மட்டும் எதிர்திசையில் செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படுகிறது. விருதுநகரின் மேற்கு பகுதி மக்கள் தான் விருதுநகருக்கு வர முடியாது கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். ஆகவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைந்து சர்வீஸ் ரோடு பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.