நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேசினார்.அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. கமிஷனர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் பழனிச்சாமி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:பாலசுப்பிரமணியன், (மா. கம்யூ.,): விருதுநகர் ரோடு மலையரசன் கோயில் பகுதிகளில் உள்ள கணவாய்களின் நீர் வழி பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. 2 1/2 ஆண்டுகளாக அகற்ற நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்றைக்குத்தான் அகற்ற போகிறீர்கள். இதற்கு கண்டிப்பாக தீர்வு காண வேண்டும்.காந்திமதி, (தி.மு.க.,): முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.பழனிச்சாமி, துணை தலைவர்: துரித நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.ஜெயகவிதா, ( தி.மு.க.): தெற்குத் தெரு மீனாட்சி தெருவில் நகராட்சிக்கு சொந்தமான 16 ஆயிரம் சதுர அடியில் நிலம் உள்ளது. இதை அளந்து நகராட்சி கையகப்படுத்த வேண்டும்.ராமதிலகம், (அ.தி.மு.க.,): திருச்சுழி ரோடு பகுதி இருபுறமும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளன. போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது. இதை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுங்கள்.இவ்வாறு விவாதங்கள் நடந்தது.