திருவள்ளூர்:அமெரிக்க முத்திரை பதித்த, போலி தங்க பிஸ்கட்களை விற்ற நபரை, திருவள்ளூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் செட்டியாரின் மகன் லோகநாதன், 56; நில புரோக்கர். இவர், சென்னை யானைக்கவுனி சவுகார்பேட்டையில், தான் வாங்கியிருந்த இரண்டு சக்கர வாகனத்துக்கு பணம் கட்டச் சென்றார்.அப்போது, வேலூர் காந்திபுரத்தைச் சேர்ந்த மதன்லால் ஜெயின் மகன் பிரேம்சந்த் ஜெயின் என்பவர் லோகநாதனிடம், தன்னிடம் தங்கக் கட்டிகள் இருப்பதாகவும், அதை விற்க ஆட்கள் யாராவது இருந்தால் கூறும்படி ஆசை வார்த்தை கூறியுள்ளார். லோகநாதனின் செல்போன் எண்ணையும் பிரேம்சந்த் வாங்கியுள்ளார்.கடந்த 5ம் தேதி பிரேம்சந்த், லோகநாதனை திருவள்ளூருக்கு வரச் சொல்லி, அவரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தான் வைத்திருந்த 15 மற்றும் 10 கிராம் எடையுள்ள இரண்டு போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்துள்ளார். அத்துடன், அச்சடிக்கப்பட்ட போலி ஒரு மில்லியன் அமெரிக்க டாலரையும் கொடுத்துள்ளார்.
அதைப் பெற்றுக் கொண்ட லோகநாதன், தனக்குத் தெரிந்த அடகுக் கடைக்காரரிடம் கொண்டு போய் காட்டியுள்ளார். தங்கக் கட்டிகளை பரிசோதித்த நகைக் கடைக்காரர், அவை போலி எனக் கூறியுள்ளார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த லோகநாதன், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், சமயோசிதமாக செயல்பட்டார். அவர் பிரேம்சந்திடம், 'நீங்கள் கொடுத்த தங்கக் கட்டிகளை விற்றுவிட்டேன். அதற்கான பணத்தை வந்து பெற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறினார்.
பணத்தை வாங்குவதற்காக பிரேம்சந்த் நேற்று, திருவள்ளூருக்கு வந்தார். அப்போது, லோகநாதன் தனது நண்பர்களான வெங்கத்தூர் கண்டிகையைச் சேர்ந்த ஏழுமலை, திருவள்ளூர் மணவாள நகரைச் சேர்ந்த குபேந்திரன் ஆகியோரின் உதவியுடன், பிரேம்சந்த்தை பிடித்து, திருவள்ளூர் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.அவரிடம் இன்ஸ்பெக்டர் தயாளன், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் இளங்கோ, வெங்கடேசன், தலைமைக் காவலர்கள் சந்திரன், சரவணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. பிரேம்சந்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.