உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமி பாலியல் வன்கொடுமை விடுதலையானவருக்கு 10 ஆண்டு

சிறுமி பாலியல் வன்கொடுமை விடுதலையானவருக்கு 10 ஆண்டு

சென்னை:சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்து, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.நாகை மாவட்டம் கண்டியூரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 21. அப்பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்ததாக, குத்தாலம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நாகை நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, 2017ல் அவரை விடுதலை செய்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.ஹேமலதா பிறப்பித்த உத்தரவு:சிறுமி மிரட்டலுக்கு ஆளானதால், தனக்கு நேர்ந்ததை வெளியில் சொல்லவில்லை. 2015ல் வயிற்று வலிக்காக, அரசு மருத்துவமனையில் காத்திருந்த போது, சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, 2013ல் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து உள்ளார். எனவே, 2015ல் குழந்தையை பெற்றெடுக்க முடியாது என்ற அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை, 2017ல் விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு, 10 மாதங்களுக்கு முன், பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்ட நபருடன் உடலுறவு கொள்ளவில்லை என, விசாரணை நீதிமன்றம் எப்படி முடிவு செய்தது என்பது தெரியவில்லை. விசாரணை நீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.இந்த வழக்கில் குற்றவாளியை விடுவிக்கும் வகையில், சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகள் ஆழமாக புதைக்கப்பட்டிருப்பது நீதியின் கேலிக்கூத்தாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர், எந்த அனுதாபத்தையும் பெறத் தகுதியானவர் அல்ல. பாதிக்கப்பட்டவரின் வயதை அறிந்து, அவரை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.தற்போதைய வழக்கை பொறுத்தவரை பாலியல் செயல், சம்மதத்துடன் நடந்ததா அல்லது கட்டாயத்திலா என்பது முக்கியமற்றது. எனவே, விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை