சென்னை : தமிழக மின்தேவை தினமும் சராசரியாக, 15,000 மெகாவாட் என்றளவில் உள்ளது. இந்தாண்டு மார்ச் முதல் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், 'ஏசி' உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால், மின்தேவை 18,000 மெகாவாட்டை தாண்டியது.இம்மாதம் 2ம் தேதி மாலை 3:30 மணிக்கு, எப்போதும் இல்லாத வகையில் 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.தொடர்ந்து அதிகரித்த மின்தேவையால், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்களில், 'ஓவர் லோடு' காரணமாக பழுது ஏற்பட்டது. இதனால், பல இடங்களில் இரவில் மின்தடையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல், அதிகாலை வரை மழை பெய்தது. இதனால், நேற்று முன்தினம் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.இதையடுத்து, கடந்த சில தினங்களாக தினமும் 19,500 மெகா வாட்டாக இருந்த மின் தேவை, நேற்று முன்தினம் 1,500 - 2,000 மெகா வாட் வரை குறைந்து, 18,000 - 17,500 மெகா வாட்டாக இருந்தது.இதுமேலும் குறைய, கோடை மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு மின் வாரியத்திடம் எழுந்துள்ளது.
24 - 26 டிகிரியில் 'ஏசி'யை வையுங்க...
தமிழகத்தில் மார்ச் முதல் கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால், வீடு, அலுவலகங்களில், 'ஏசி' சாதனத்தின் பயன்பாடு அதிகரித்தது. நாளுக்கு நாள் வெயிலின் வெப்ப அலை கடுமையாக இருந்தது. இதனால், வீடுகளில் இரவில் மட்டுமின்றி பகலிலும் ஏசி சாதனத்தை பயன்படுத்தி வருகின்றனர். வெப்பத்தை தணிக்க, ஏசி சாதனம் இல்லாத வீடுகளிலும் புதிதாக வாங்கி வருகின்றனர்.'மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வந்ததற்கு, ஏசி சாதன பயன்பாடே முக்கிய காரணம்' என, மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு டன் திறன் உடைய ஏசி சாதனம், ஒரு மணி நேரம் இயங்கினால், 1 யூனிட் மின்சாரம் செலவாகிறது. இது, 1.50 டன் திறன் உடைய ஏசி சாதனத்தில், 1.50 யூனிட் செலவாகிறது. பலரும் விரைவில் குளர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஏசி சாதனத்தில், 18 'டிகிரி' செல்ஷியசை பயன்படுத்துகின்றனர். வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரிப்பால், பலருக்கும் மின் கட்டணம் அதிகம் வரும். இதுகுறித்து, மின்வாரியம் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள விபரத்தில், 'ஏசி சாதனத்தை, 24 - 26 டிகிரி செல்ஷியசில் வைப்பதன் வாயிலாக, 36 சதவீதம் மின் கட்டணம் சேமிக்கலாம். இன்றே உறுதி செய்திடுங்கள்; பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.