வேலுார்: மதுரையை சேர்ந்தவர் ரவி, 65; சாமியார். இவர், வேலுார் மாவட்டம், காட்பாடி, வள்ளிமலை கோட்டநத்தத்தில் குடிசை கட்டி வசித்தார். அப்பகுதியில் நடக்கும் மணல் கடத்தல் உள்ளிட்டவற்றை போலீசாருக்கு தெரிவித்து வந்தார்.அவரை கொன்று புதைத்து விட்டதாக, இரு நாட்களுக்கு முன் தகவல் பரவியது. மேல்பாடி போலீசார், கோட்டநத்தம் அரிகிருஷ்ணன், 40, சின்ன வள்ளிமலை மதன்குமார், 36, மேல்பாடி லோகேஷ்குமார், 34, வள்ளிமலை பிரபு, 31, ஆகியோரை பிடித்து விசாரித்ததில், சாமியாரை அடித்துக்கொன்றதாக ஒப்புக்கொண்டனர்.போலீசார் கூறியதாவது:கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு வந்து சென்ற அரிகிருஷ்ணன் என்பவரின் மொபைல் போன் மாயமானது. அதை ரவி எடுத்திருக்கலாம் என சந்தேகித்த அவர், மதன்குமார், லோகேஷ்குமார், பிரபு, வள்ளிமலையை சேர்ந்த திருமலை ஆகியோர், ரவியை அடித்துக்கொன்று, அவரது வீடு அருகே புதைத்தது தெரியவந்தது.நான்கு பேரை கைது செய்து, திருமலையை தேடி வருகிறோம். ரவி சடலத்தை, வேலுார் மாவட்ட தடயவியல் நிபுணர் சொக்கநாதன் தலைமையில் குழுவினர், தோண்டி எடுத்து அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.