| ADDED : ஏப் 27, 2024 02:07 AM
திருநெல்வேலி:குடும்ப தகராறில் அண்ணன் தம்பியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தாக்கிய இன்ஸ்பெக்டர், 3 போலீசார் தலா ரூ 25 ஆயிரம் வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.சென்னை சைதாப்பேட்டை குமரன் காலனியில் வசிப்பவர் மாரிமுத்து. இவருக்கும் தென்காசி பேச்சியம்மாளுக்கும் திருமணம் நடந்தது. 2019 ஆக.,28ல் பேச்சியம்மாளுக்கு திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க மாரிமுத்துவும் அவரது அண்ணன் பேச்சிமுத்துக்குமாரும் வந்திருந்தனர். குழந்தையை பார்ப்பது தொடர்பாக இருவீட்டாருக்கும் மருத்துவமனையில் தகராறு நடந்தது. பெண் வீட்டார் புகாரின் பேரில் போலீசார் மாரிமுத்துவையும் பேச்சி முத்துக்குமாரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் லத்தியால் இருவரையும் தாக்கினர்.இருவரும் மறுநாள் திருநெல்வேலி மாநகர போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். மனித உரிமை ஆணையம் இரு தரப்பையும் விசாரித்தது. திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த விசாரணையின் போது மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பாதிக்கப்பட்ட மாரிமுத்து 2019ல் சட்டக் கல்லுாரி மாணவர். அவரது சகோதரர் வழக்கறிஞர். இருவருக்கும் தமிழக அரசு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த தில்லை நாகராஜன், ஏட்டுகள் சண்முகநாதன், பிரேம்குமார், சிறப்பு எஸ்.ஐ., முத்துராமலிங்கம் ஆகியோரிடம் தலா ரூ 25 ஆயிரம் பிடித்தம் செய்து வழங்கவும் உத்தரவிட்டார்.