பாகூர்: தமிழகத்தில் நேற்று வெவ்வேறு இடங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மநாபன், 48; கடலுார் 25வது வார்டு அ.தி.மு.க., அவைத்தலைவர். பெயின்டிங் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாஸ்கர், 37, என்பவரை கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட பத்மநாபன், கடந்த நவம்பரில் ஜாமினில் வந்தார். பின்னர் வழக்கம் போல் வேலைக்கு சென்று வந்தார்.நேற்று முன்தினம் இரவு, புதுச்சேரி மாநிலம், பாகூர் அடுத்த தமிழக பகுதியான திருப்பணாம்பாக்கம் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியை பார்க்க சென்றார்.நிகழ்ச்சி முடிந்து, நேற்று காலை, 6:00 மணியளவில், தன் நண்பரான கூத்து கலைஞர் ரங்கா, 57, என்பவருடன் பைக்கில், கடலுார் நோக்கி வந்தார். பழிக்குப்பழி
புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட பாகூர் அருகே இருளஞ்சந்தை வாட்டர் டேங்க் சந்திப்பு அருகே வந்தபோது, எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. பைக்கில் இருந்து பத்மநாபன், ரங்கா இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், பத்மநாபனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பியது.ரத்த வெள்ளத்தில் பத்மநாபன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். கீழே விழுந்த ரங்கா படுகாயமடைந்தார். பாகூர் போலீசார், பத்மநாபன் உடலை கைப்பற்றி, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு கடலுாரில் நடந்த வளைகாப்பு விழாவில், நடனம் ஆடியது தொடர்பாக பத்மநாபன் தரப்பிற்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாஸ்கருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் பாஸ்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, பத்மநாபன் உள்ளிட்ட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பாஸ்கர் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்கள் மறியல்
அதே போல, சிவகங்கையில் பா.ஜ., பிரமுகரும் முகம் சிதைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை அருகே வேலாங்குளத்தில் செங்கல் சூளை நடத்தி வந்தவர் செல்வகுமார், 52. பா.ஜ.,வில் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, டூ - வீலரில் சென்று கொண்டிருந்தார். சாத்தரசன்கோட்டை மெயின் ரோட்டில் இவரை வழிமறித்த மூன்று பேர், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் முகத்தை சிதைத்து கொலை செய்தனர்.கொலையாளிகளை கைது செய்யக்கோரி, இளையான்குடி ரோட்டில் கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக சிவகங்கை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் உறுதியளித்ததால் மறியலை கைவிட்டனர்.செல்வகுமார் உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலை வாங்க மறுத்து, நேற்று காலை, மானாமதுரை ரோட்டில் பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.கொலையாளிகளை கைது செய்து விடுவோம் என, டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டு, உடலை பெற்றுக்கொண்டனர். இந்த படுகொலைகளை கண்டித்து, அந்தந்த கட்சி தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
புதிய சட்டத்தால் தாமதம்
பத்மநாபன் கொலை சம்பவம் அரங்கேறி நான்கு மணி நேரத்திற்கு பிறகே சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் சிதறி கிடந்த உடல் பாகங்களையும், உறைந்து கிடந்த ரத்தத்தை சாப்பிட காகங்கள் கூட்டம் முயன்றது. தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டப்படி, சம்பவம் நடந்த இடம் முதல் அனைத்து விசாரணையும் வீடியோ பதிவு செய்து, அதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், அதற்கான பணிகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காங்., முன்னாள் நிர்வாகி கொலை
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே மூவாற்றுமுகம் குன்னத்து விளையைச் சேர்ந்தவர் ஜாக்சன், 38; திருவட்டார் நகர இளைஞர் காங்., முன்னாள் தலைவர். சொந்தமாக மினிலாரி ஓட்டி வருகிறார். இவரது மனைவி உஷா குமாரி திருவட்டார் பேரூராட்சி 10வது வார்டு காங்., கவுன்சிலர்.நேற்று முன்தினம் இரவு ஜாக்சன் சர்ச் அருகே நின்று கொண்டிருந்த போது, இரு பைக்குகளில் வந்த ஆறு பேர் அவரிடம் தகராறில் ஈடுபட்டு, சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பினர். தொடர்ந்து சம்பவ இடத்தில் எஸ்.பி., சுந்தரவதனம் விசாரணை நடத்தினார்.திருவட்டார் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெள்ளாங்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார், 32, தலைமையில் வந்தவர்கள் கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ராஜ்குமாருக்கும், ஜாக்சனுக்கும் முன் விரோதம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.